தீ விபத்தில் 22 வீடுகள் சாம்பல் புதிய வீடு, மின்சாரம் வழங்க கோரி பொதுமக்கள் திடீர் சாலைமறியல்

திருச்சி, மார்ச் 14: திருச்சியில் தீயில் எரிந்து போன 22 வீடுகளுக்கு பதிலாக புதிய வீடும், உடனடியாக மின்சார இணைப்பும் வழங்கிடகோரி பாதிக்கப்பட்ட பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

திருச்சி கன்டோன்மென்ட் ஒத்தக்கடை அருகே குதுப்பாபள்ளம் உள்ளது. இந்த பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடிசைகள் வீடுகள் உள்ளன. இந்நிலையில் கடந்த 11ம் தேதி நள்ளிரவு 1.30 மணியளவில் குடிசை வீடு ஒன்றில் தீப்பற்றியது. அருகருகே வீடுகள் இருந்ததால் சிறிது நேரத்திற்குள் அடுத்தடுத்த வீடுகளுக்கும் தீ பரவியது. இதனால் வீடுகளில் இருந்தவர்கள் அலறியடித்து வெளியே ஓடி வந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த கன்டோன்மென்ட் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடம் வந்து தீ மேலும் பரவாமல் அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அதற்குள் குடிசைகள் மளமளவென்று 22 குடிசை வீடுகள் எரிந்து சாம்பலானது. இதில் வீடுகளில் இருந்த 2 காஸ் சிலிண்டர் வெடித்து சிதறியது. 3 தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீயணைப்பு வீரர்கள் 2 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதில் யாருக்கும் எந்தவித உயிர்சேதமும் ஏற்படவில்லை. இந்த தீ விபத்தில் அங்கிருந்த மாரியம்மன் கோயிலும் எரிந்து சேதமானது. இதனால் அப்பகுதியில் கடந்த 2 நாட்களாக மின்விநியோகம் இல்லாமல் இருளடைந்து காணப்படுகிறது. இந்நிலையில் தீ விபத்தில் எரிந்த குடிசைகளுக்கு பதிலாக புதியதாக வீடு கட்டி தரவேண்டும், உடனடியாக அந்த பகுதிக்கு மின்இணைப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து நேற்று ஒத்தக்கடை பகுதியில் திரண்ட பொதுமக்கள் திடீரென சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த போலீசார் அங்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக கூறியதால் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் 15 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories: