சுவரொட்டி, துண்டுபிரசுரங்கள் அச்சடிப்பதில் தேர்தல் விதிகளை மீறினால் அச்சகங்கள் மீது நடவடிக்கை டிஆர்ஓ எச்சரிக்கை

திருச்சி, மார்ச் 14: அச்சக உரிமையாளர்கள் தேர்தல் விதிகளை மீறி விளம்பரங்கள், துண்டு பிரசுரங்கள் அச்சடித்தால் உரிமம் ரத்து செய்யப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.அச்சக உரிமையாளர் மற்றும் பதிப்பகத்தார் பின்பற்ற வேண்டிய தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து டிஆர்ஓ சாந்தி கூறியுள்ளதாவது: மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951 பிரிவு 127 யுஇன்படி  தேர்தல் தொடர்பான சுவரொட்டிகள், துண்டுப்பிரசுரம் மற்றும் தேர்தல் தொடர்பான விளம்பரங்களை அச்சிட்டு பிரசுரம் செய்யும்போது கண்டிப்பாக அச்சக உரிமையாளரின் பெயர் மற்றும் முகவரி மற்றும் பதிப்பகத்தார் பெயர் மற்றும் முகவரி சுவரொட்டி, துண்டு பிரசுரத்தின் முன் பக்கத்தில் படிக்கும் வகையில் தெளிவாக அச்சடிக்கப்பட வேண்டும். இல்லாவிட்டால் சட்டப்படி குற்றமாகும்.தேர்தல் தொடர்பான சுவரொட்டிகள், துண்டு பிரசுரம் அச்சிடுவதற்கு முன் பதிப்பகத்தாரிடம் உரிய அனுமதி, உரிய படிவத்தில் (இணைப்பு - 1) இரண்டு நகல்கள் பெற வேண்டும்.பதிப்பகத்தார் உரிய அனுமதி பெற்ற பிறகே அச்சக உரிமையாளர்கள் அச்சு செய்ய வேண்டும். அச்சடித்த மூன்று தினங்களுக்குள் இணைப்பு-2 படிவத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டருக்கு அறிக்கை அனுப்ப வேண்டும்.

மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951 பிரிவு 127 யு (2) - ன் படி மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு இணைப்பு-2-ல் படிவத்தில் உரிய இணைப்புகளுடன் அறிக்கை அனுப்புதல் அவசியம். அறிக்கை அனுப்பாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும். விதிமுறைகள் மீறப்பட்டது உறுதி செய்யப்பட்டால் உடனடியாக அச்சகத்தின் உரிமம் ரத்து செய்யப்படும். சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தகவல் பலகையில் அச்சக உரிமையாளரால் வழங்கப்பட்ட சுவரொட்டி, துண்டு பிரசுரம் ஒட்டப்படும். அச்சடிக்கப்பட்ட துண்டு பிரசுரமானது சட்டத்திற்கு புறம்பானதாகவோ, அல்லது மதம், இனம், மொழி, வகுப்பு மற்றும் சாதி ஆகிய விவரங்கள் தொடர்பான எதிர்ப்பு இருந்தாலோ அல்லது தனிமனித நடத்தை குறித்த விவரங்கள் எதிர்ப்பு உடையதாக இருந்தாலோ உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஒருமுறை உபயோகப்படும் பிளாஸ்டிக் மூலம் தயாரிக்கப்பட்ட விளம்பர பதாகைகள், பேனர்கள், கட்அவுட்டுகள், கொடிகள் உள்ளிட்ட சுற்றுச்சூழலுக்கு கேடுவிளைவிக்கக்கூடியனவற்றை தேர்தல் பிரசாரத்திற்காக அச்சிடுவதை முற்றிலுமாக தவிர்த்தல் வேண்டும் என்றார்.

Related Stories: