கட்சி சுவர் விளம்பரங்கள் அழிக்கப்படவில்லை தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வரவில்லையா? மக்கள் சந்தேகம்

திருவாரூர், மார்ச் 14: திருவாரூர் தொகுதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகள்  அமலுக்கு வந்துள்ளபோதும் நேற்று வரையில் நகரின் பல்வேறு இடங்களில் அரசியல் கட்சியினரின் சுவர்  விளம்பரங்கள் அகற்றப்படாமல் இருந்து வருகிறது. இதனால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வரவில்லையா என மக்கள் சந்தேகமடைந்துள்ளனர்.  17வது மக்களவைக்கான நாடாளுமன்ற தேர்தலை 7 கட்டங்களாக நடத்துவது தொடர்பாக தேர்தல் அறிவிப்பினை கடந்த 10ம் தேதி மாலை இந்திய தேர்தல் ஆணையமானது அறிவித்தது. அதன்படி 2வது கட்டமாக தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகள மற்றும் புதுவையில் உள்ள ஒரு தொகுதி என மொத்தம் 40 தொகுதிகளுக்கும் அடுத்த மாதம் 18ந் தேதி தேர்தல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த நாடாளுமன்ற தேர்தலோடு சேர்த்து தமிழகத்தில் காலியாக உள்ள 21 தொகுதிகளில் ஓட்டபிடாரம், திருப்பரங்குன்றம் மற்றும் அரவக்குறிச்சி உட்பட  18 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி திருவாரூர் தொகுதியில் எம்எல்ஏவாக இருந்து வந்த திமுக தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவு காரணமாக கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் 7ம் தேதி இறந்ததையடுத்து  இந்த தொகுதிக்கும் அடுத்த மாதம் 18ம்தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட 10ம் தேதி மாலை முதலே தேர்தல் விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதன்படி நாடு முழுவதும் அரசியல் கட்சியினர் மூலம் வைக்கப்பட்டுள்ள பேனர்கள் மற்றும் சுவர் விளம்பரங்கள் அகற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருவாரூர் தொகுதியில் மட்டும் நகரின் பனகல் சாலை, பழைய பேரூந்து நிலையம் அருகில் உள்ள வேளாண்மை துறை அலுவலக கட்ட சுவர், அம்மா உணவகம், அம்மா குடிநீர் பாட்டில் விற்பனை செய்யும் ஸ்டால், தாய்மார்கள் பாலூட்டும் அறை  உட்பட பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டுள்ள பேனர்கள் மற்றும் சுவர் விளம்பரங்கள் நேற்று வரையில் அழிக்கப்படாமல் இருந்து வருகிறது. இதன் காரணமாக தேர்தல் விதிமுறைகள் இன்னும் அமுலுக்கு வரவில்லையா என்று பொது மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Related Stories: