பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் கண்காணிப்புக்குழு, தேர்தல் கட்டுப்பாட்டு அறை செயல்பாடுகள் கலெக்டர் ஆய்வு

பெரம்பலூர், மார்ச் 14: பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்புக்குழு, தேர்தல் கட்டுப்பாட்டு அறை செயல்பாடுகளை கலெக்டர் சாந்தா நேரில் ஆய்வு செய்தார்.

நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொதுத் தேர்தலை அமைதியாகவும், சுமுகமாகவும் நடத்திட இந்தியத் தேர்தல் ஆணைய உத்தரவின் பேரில் பெரம்பலூர் மாவட்டத்தில் பறக்கும் படை, தீவிர கண்காணிப்புக்குழு, வீடியோ வியூவிங்குழு, சேவை மையம், ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்புக்குழு உள்ளிட்டப் பல்வேறுகுழுக்கள் அமைக்கப்பட்டு தேர்தல் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.அதன்படி நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொதுதேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் தங்களின் பிரசாரத்திற்காக உள்ளூர் கேபிள் தொலைகாட்சிகள் மற்றும் செய்தித்தாள்களில் தேர்தல் பிரசார விளம்பரங்கள் மற்றும் செய்திகள் ஏதேனும் வெளியிடப்படுகிறதா என்பது குறித்து கண்காணிப்பதற்காகவும், ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவிடம் அனுமதி பெற்று உள்ளூர் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பிட ஏதுவாக  24 மணி நேரமும் இயங்கும் வகையில் 3 குழுக்களாக பிரிக்கப்பட்டு பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்புக்குழு செயல்பட்டு வருகிறது.

இந்த குழுவின் மூலமாக செய்திதாள்களில் வெளிவரும் அரசியல் கட்சியினரின் தேர்தல் பிரசார விளம்பரங்களைக் கண்காணித்து அவற்றை வேட்பாளரின் தேர்தல் செலவினத்தில் சேர்ப்பது உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வருவது குறித்தும், அதனைத் தொடர்ந்து கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்படும் கட்டுப்பாட்டு அறையின் செயல்பாடுகள் குறித்தும், கட்டுப்பாட்டு அறையில் பெறப்படும் புகார்கள் குறித்து மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் கலெக்டர் சாந்தா நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த மையங்களின் செயல்பாடுகளை பார்வையிட்ட கலெக்டர் தேர்தலை நேர்மையாக நடத்திட ஏதுவாக எவ்வித பாரபட்சமும் இன்றி செயலாற்றிட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். நிகழ்ச்சியின்போது, டிஆர்ஓ அழகிரிசாமி, கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொ) ராஜராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories: