பூக்களும் காய்களும் கருகின்றன மழையின்றி ‘மா’ விவசாயம் பாதிப்பு விருதுநகர் மாவட்டத்தில் விவசாயிகள் வேதனை

விருதுநகர், மார்ச் 14: விருதுநகர் மாவட்டத்தில் போதிய மழையின்றி மா விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. பூக்களும், காய்களும் கருகுவதால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் ராஜபாளையம், திருவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு, அருப்புக்கோட்டை ஆகிய பகுதிகளில் 7 ஆயிரம் ஏக்கரில் மா சாகுபடி செய்யப்படுள்ளது. நவம்பர் மாதம் மாமரங்கள் பூக்கத் தொடங்கும். அப்போது போதிய மழை இல்லாமல் பூக்கள் கருகி கீழே உதிர்ந்துவிட்டன. மேலும், மரங்களில் இருந்த மாம்பிஞ்சுகளும், மா மரங்களும் கூட மழையில்லாமல் கருகிவிட்டன. இதனால், மா விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து மெட்டுக்குண்டு மா விவசாயி முருகன் கூறியதாவது: நான்கு ஏக்கரை குத்தகைக்கு எடுத்து மா விவசாயம் செய்து வருகிறோம். நவம்பர் மாதம் மரங்களில் கொத்து, கொத்தாக பூக்கள் பூக்கத் தொடங்கின. ஆனால், போதிய மழையின்மையால் பூக்களும், காய்களும் கருகி விட்டன. பூவாக இருந்த மரங்கள் எல்லாம் தற்போது குச்சிகளாக மட்டுமே உள்ளன. கார்த்திகை மாதம் முதல் இதுவரை 4 முறை உழுவு செய்துள்ளோம். ஒரு முறை உழுவதற்கு ரூ.2 ஆயிரம் செலவாகும். உரம், மருந்து செலவு, கூலி என 2 லட்சம் வரை செலவு செய்துள்ளோம். இந்தாண்டு விளைச்சல் சுத்தமாக இல்லை. பட்டப்படிப்பு முடித்து வேலை வேண்டாம் என விவசாயம் பார்த்து வந்தேன். மழையில்லாமல் எப்படி விவசாயம் செய்ய முடியும். பருவமழை சரியாக பெய்திருந்தால் ஏப்ரல் மாத கடைசியில் மாம்பழங்கள் அறுவடைக்கு வந்திருக்கும்.  இப்போது பூக்களும், பிஞ்சும், காயும் இல்லாத வெறும் மரங்களை மட்டும் தான் பார்க்கிறோம்’ என்றார்.

Related Stories: