சிவகாசி 23வது வார்டில் 8 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் ஜக்கம்மாள் காலனி பொதுமக்கள் அவதி

சிவகாசி, மார்ச் 14: சிவகாசி 23வது வார்டில் உள்ள ஜக்கம்மாள் காலனியில் 8 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்வதால், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். மேலும், இப்பகுதியில் உள்ள தட்டாவூரணியில் போதிய வாறுகால் வசதியின்றி தெருக்களில் கழிவுநீர் தேங்குகிறது. இதனால், பொதுமக்களுக்கு சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. சிவகாசி நகராட்சி 23வது வார்டில் தட்டாவூரணி, ஜக்கம்மாள் கோவில் காலனி, காளியப்பா நகர், அ.சி.காலனி உள்ளிட்ட பல பகுதிகள் உள்ளன. இந்த பகுதிகளில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு போதிய அடிப்படை வசதியின்றி பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். இங்குள்ள தெருக்களில் வாறுகால், கழிப்பறை வசதிகள் இல்லை. முறையான வாறுகால் இன்றி கழிவுநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஜக்கம்மாள் கோயில் தெருவில் கடந்த பல ஆண்டுகளாக சாலை சீரமைக்கப்படாமல் உள்ளது. இந்த சாலை வழியாக பள்ளி, அலுவலகங்களுக்கு செல்வோர் அவதிப்படுகின்றனர். இங்குள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்டி முடிந்து பல ஆண்டுகளாகியும் பயன்பாட்டுக்கு வரவில்லை. இதனால் 8 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இதனால், பொதுமகக்ள் அவதிப்படுகின்றனர்.

தட்டாவூரணி பகுதியில் 200க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. ஆனால், இந்த பகுதியில் வாறுகால், கழிப்பறை போன்ற அடிப்படை வசதி இல்லை. இங்குள்ள குப்பை கழிவுகளும் தினமும் அள்ள படுவதில்லை. மக்கள் விளாம்பட்டி சாலையில் குப்பை கழிவுகளை கொட்டி செல்கின்றனர். இங்கு மலைபோல் குவிந்து கிடக்கும் குப்பை கழிவை நகராட்சி சுகாதார துறையினர் அகற்றாததால் தீ வைத்து எரிக்கின்றனர். இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் விபத்தில் சிக்கி வருகின்றனர்.தட்டாவூரணி சிவகாசி நகரின் மையப்பகுதியல் அமைந்துள்ளது. இங்கு பன்றிகள் அனுமதியின்றி வளர்க்கப்படுகிறது. பன்றிகள் அருகில் உள்ள குப்பை கழிவுகளை கிளறி அங்கேயே வசித்து வருவதால் சுகாதார கேடு உருவாகிறது. நகராட்சி நிர்வாகம் நகராட்சி பகுதியில் பன்றிகள் வளர்க்க தடை விதித்துள்ளனர். இதனால் நோய் பரவும் ஆபத்து உள்ளது. ஆனால் சிவகாசி நகரின் மைய பகுதியில் உள்ள தட்டாவூரணியில் பன்றிகள் பன்னை போல் கூட்டம் கூட்டாக வளர்க்க படுகிறது. நகராட்சி நிர்வாகம் பன்றிகளை ஒழிக்க நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: