சிவகாசி-திருவில்லிபுத்தூர் சாலையில் குலை நடுங்க வைக்கும் குப்பை புகை

சிவகாசி, மார்ச் 14: சிவகாசி-திருவில்லிபுத்தூர் சாலையில் ரிசர்வ்லைனில் குப்பைகளில் வைக்கப்படும் தீயால், புகை மூட்டம் உருவாகி, வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.சிவகாசி-திருவில்லிபுத்தூர் சாலையில் ரிசர்வ்லைனில் தொழில்பேட்டை உள்ளது. இந்த தொழில்பேட்டையை சுற்றி சுற்றுக்சுவர் இல்லை. இப்பகுதிகளில்  மாமிசக் கழிவுகள் மற்றும் குப்பைகள் கொட்டுகின்றனர். இதில், சிலர் தீ வைத்து விடுகின்றனர். குறிப்பாக காலை வேளையில் தீ வைப்பதால் பெரும் புகை மூட்டம் உருவாகிறது. இதனால், சிவகாசி-திருவில்லிபுத்தூர் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. இந்த சாலை வழியாகச் செல்லும் மாணவ, மாணவியர் பெரும் சிரமப்படுகின்றனர்.

புகைமூட்டம் காரணமாக ராஜா காலனி, இந்திராநகர் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், வியாபாரிகள் சுவாசக் கோளாறு ஏற்பட்டு கடும் அவதிப்படுகின்றனர். மேலும் அலர்ஜி, ஆஸ்துமா போன்ற பாதிப்புகளை அப்பகுதி பொதுமக்களுக்கு ஏற்படுகிறது. குப்பை புகையை சுவாசிக்க முடியாமல் குடியிருப்புவாசிகள் வீடுகளை பூட்டி வைத்துக்கொள்கின்றனர். மேலும் தேங்கி கிடக்கும் குப்பைகளில் நாய்கள், மாடுகள் கிளறுவதால், பெரும் சுகாதாரச் சீர்கேடு ஏற்படுகிறது. எனவே, பொதுமக்கள் நலன் கருதி குப்பைகளுக்கு தீ வைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குப்பைகளை அவ்வவ்போது அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Related Stories: