சிவகாசியில் சொத்துவரி விதிப்பில் பாரபட்சம் நகராட்சி மீது பொதுமக்கள் புகார்

சிவகாசி, மார்ச் 14: சிவகாசியில் சொத்துவரி விதிப்பில் பாரபட்சம் காட்டுவதாக நகராட்சி மீது பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். பெரிய கட்டிடங்களுக்கு குறைவாகவும், சிறிய கட்டிடங்களுக்கு அதிகமாகவும் வரி விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சிவகாசி நகராட்சியில் ஆண்டுக்கு 100 சதவீதம் வரி வசூலிக்கப்படுகிறது. ஆனால், அடிப்படை வசதிகளை செய்து தர நகராட்சி நிர்வாகம் முன்வருவதில்லை என குற்றம்சாட்டுகின்றனர். நகரில் பல இடங்களில் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. அதை அள்ளுவதற்கு போதிய சுகாதாரப் பணியாளர்கள் இல்லை. சுகாதார அதிகாரிகளும் மெத்தனம் காட்டுகின்றனர். இதனால், நகரில் குப்பை கழிவுகளால் சுகாதாரக்கேடு ஏற்பட்டு வருகிறது. நகரில் பல இடங்களில் சாலைகள் சேதமடைந்து கிடக்கின்றன. இதனை சீரமைக்க நகராட்சி நிர்வாகம் தயக்கம் காட்டி வருகிறது. புதிய சாலைகள் அதிகபட்சம் 2 ஆண்டு கூட தாங்குவதில்லை. புதிய சாலைகள் சேதமடைந்து போக்குவரத்திற்கு பயனற்றதாகிறது. நகரின் முக்கிய பகுதியான பிஎஸ்ஆர் சாலை கடந்த 2 ஆண்டுகளாக சேதமடைந்து கிடக்கிறது. நகரில் பஸ்நிலையம் தற்போது விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. இந்த விரிவாக்க பணி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக மந்த கதியில் நடைபெற்று வருவதால் பயணிகள் கடும் அவதிப்படுகின்றனர்.

இங்கு வர்த்தக நோக்கோடு கடைகள் கட்டப்பட்டுள்ளன. இரு சக்கர வாகன காப்பக்திற்கு ‘அண்டர் கிரவுண்ட்’ அமைக்கப்படவில்லை. இதனால், சிவகாசி பஸ்நிலையத்தில் தற்போது மேலும் இடநெருக்கடி ஏற்படும் சூழல்தான் ஏற்பட்டுள்ளது. பஸ்நிலையத்தில் இருந்த இலவச கழிப்பிடம் அகற்றப்பட்டு, பல மாதங்களாகியும் மாற்று ஏற்பாடு செய்யப்படவில்லை. கட்டண கழிப்பிடத்தில் கூடுதலாக கட்டணம் வசூலிப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதனிடையே, நகராட்சிக்கு போதிய வருமானம் இல்லை என நூறு சதவீதம் வரை வரிகளை உயர்த்தியுள்ளனர். நகரில் உள்ள பல பெரிய  குடியிருப்புகளுக்கு குறைந்த வரி வசூலிக்க படுகிறது. சிறிய அளவில் உள்ள  குடியிருப்புகளுக்கு அதிக வரி விதிக்கப்படுகிறது. சொத்து வரி விதிப்பில் நகராட்சி நிர்வாகம் பாரபட்சம் காட்டுவதாக ஏழை, எளியவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். எனவே, சிவகாசி நகராட்சியில் குடிசை பகுதி வீடுகள் மற்றும் சிறிய தொழில் நிறுவனங்களுக்கு உயர்த்தப்பட்ட வரியை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: