இன்று துவங்குகிறது எஸ்.எஸ்.எல்.சி பொதுத் தேர்வு

தேனி, மார்ச் 14: தேனி மாவட்டத்தில் இன்று தொடங்க உள்ள எஸ்.எஸ்.எல்.சி பொதுத் தேர்வினை 16 ஆயிரத்து 136 மாணவ, மாணவியர் எழுத உள்ளனர்.தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை தேர்வாணையம் மூலமாக இன்று (14ம்தேதி) முதல் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வு தொடங்க உள்ளது. முதல்நாளான இன்று மொழி முதல்தாள் தேர்வு நடக்கிறது. இதையடுத்து, இத்தேர்வு வருகிற மார்ச் 29ம் தேதி வரை நடக்க உள்ளது.தேனி மாவட்டத்தில் தேனி, பெரியகுளம், உத்தமபாளையம் என மூன்று கல்வி மாவட்டங்கள் உள்ளன. இதில் மூன்று கல்வி மாவட்டங்களையும் சேர்த்து அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் தனியார் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள், மெட்ரிக் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள், சுயநிதி பள்ளிகள், கள்ளர், ஆதிதிராவிடர் நல பள்ளிகள் என மொத்தம் 202 பள்ளிகளை சேர்ந்த 8 ஆயிரத்து 298 மாணவர்கள், 7 ஆயிரத்து 838 மாணவியர்கள் என மொத்தம் 16 ஆயிரத்து 136 மாணவ, மாணவியர் தேர்வு எழுத உள்ளனர். இதற்காக தேனி கல்வி மாவட்டத்தில் 21 தேர்வு மையங்களும், பெரியகுளம் கல்வி மாவட்டத்தில் 17 தேர்வு மையங்களும், உத்தமபாளையம் கல்வி மாவட்டத்தில் 26 தேர்வு மையங்களுமாக மொத்தம் 64 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.தனி தேர்வர்களுக்காக பெரியகுளம் கல்வி மாவட்டத்தில் ரேணுகா மெட்ரிக் பள்ளி தேர்வுமையத்தில் 201 மாணவ, மாணவிகளும், தேனி கல்வி மாவட்டம் வேலம்மாள் பள்ளி தேர்வு மையத்தில் 146 மாணவர்களும், போடி ஜெட்கேஎம் பள்ளி தேர்வு மையத்தில் 96 மாணவிகளும், உத்தமபாளையம் கல்வி மாவட்டம் சின்னமனூர் காயத்ரி பள்ளி தேர்வுமையத்தில் 254 மாணவ, மாணவியர்களுமாக மொத்தம் 697 பேர் தேர்வு எழுத உள்ளனர்.

தேர்வு நடக்கும் நாட்களில் காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை தேர்வு அனைத்து தேர்வு மையங்களுக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், வினாத்தாள் கொண்டு வரும் வாகனத்திற்கும், விடைத்தாள் கொண்டு செல்லும் வாகனத்திற்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், தேர்வு நடக்கும் நாட்களில் தேர்வு மையங்களுக்கு காலை 9 மணி முதல் மாலை 3 மணிவரை தடையில்லா மின்சாரம் வழங்கிடவும், பஸ் வசதியில்லாத கிராமங்களில் இருந்து தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளின் நலன் கருதி போக்குவரத்து வசதி ஏற்படுத்திடவும் கலெக்டர் பல்லவிபல்தேவ் உத்தரவிட்டுள்ளார்.தேர்வை கண்காணித்திட கலெக்டர் தலைமையில் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர்கள் உள்ளனர். இதுதவிர தேர்வை கண்காணிக்க பறக்கும் படையும் அமைக்கப்பட்டுள்ளது என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மாரிமுத்து தெரிவித்தார்.

Related Stories: