தேர்தலில் ஆளும் கட்சிக்கு சிக்கலை ஏற்படுத்தும் குடிநீர் தட்டுப்பாடு

சிவகங்கை, மார்ச் 14: சிவகங்கை மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் மக்களவை தேர்தலில் ஆளும் கட்சிக்கு இப்பிரச்னை பெரும் சிக்கலை ஏற்படுத்தும் நிலை உள்ளது.சிவகங்கை மாவட்டத்தில் பெரும்பாலான கிராமங்கள், பேரூராட்சிகளில் குளத்து நீரே குடிநீராக பயன்படுத்தப்பட்டு வருகிறது. குளிப்பது உள்ளிட்ட அனைத்து தேவைகளுக்கும், கால்நடைகளுக்கும் குளம் மற்றும் கண்மாய் நீரே பயன்படுத்தப்படும். ஆண்டு தோறும் டிசம்பர் மாதத்தில் அனைத்து நீர் நிலைகளும் நிறைந்து காணப்படும். நவம்பரில் மழை பெய்வது முடிவடைந்து மீண்டும் அடுத்த ஆண்டு கோடை காலத்தில் மட்டுமே மழை தொடங்கும் என்பதால் குளங்கள், கண்மாய்களில் இருக்கும் நீர் ஆறு மாத தேவையை பூர்த்தி செய்ய வேண்டும். கடந்த ஆண்டு ஓரளவு மழை இருந்தாலும், முந்தைய ஆண்டுகளில் நிலவிய கடும் வறட்சி, கடந்த ஆண்டு இறுதி முதல் தற்போது வரையிலான வெயிலால் இருந்த நீரும் விரைவாகவே வற்றியது. இதனால் தற்போது குளங்கள், கண்மாய்கள் முழுமையாக வறண்டு காணப்படுகிறது.

கடந்த சில வாரங்களாகவே சிவகங்கை கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வருபவர்கள் குடிநீர் தட்டுப்பாடு குறித்தும், உடனடியாக குடிநீர் வசதி செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் மனு அளித்தனர். ஆண்டுதோறும் குடிநீர் பாதிப்பு அதிகப்படியாக இருக்கும் இளையான்குடி, சிவகங்கை, காளையார்கோவில், தேவகோட்டை, காரைக்குடி, திருப்புவனம் உள்ளிட்ட மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் இந்த ஆண்டும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இப்பிரச்னை ஆளும் கட்சி மற்றும் அதன் கூட்டணி சார்பில் நிற்கும் வேட்பாளருக்கு பெரும் தலைவலியை உண்டாக்கும்.இன்னும் பிரச்சாரம் தொடங்கப்படாத நிலையில் இன்னும் சில வாரங்களில் வறட்சியின் பாதிப்பு கூடுதலாகவே இருக்கும். அப்போது கிராமங்களுக்கு வாக்கு கேட்டு செல்லும் ஆளும் கட்சி சார்பிலான வேட்பாளர் கடுமையான கேள்விகளை எதிர்நோக்க வேண்டியிருக்கும். இப்பிரச்சினை ஆளும் கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.அரசியல் கட்சி பிரமுகர் ஒருவர் கூறியதாவது:குடிநீர் பிரச்னை மட்டுமல்ல, உள்ளாட்சி தேர்தலை மூன்று ஆண்டுகளாக நடத்தாமல் எந்த கிராமத்திலும் சாலை, தெரு விளக்கு உள்ளிட்ட எவ்வித அடிப்படை வசதியும் இல்லை. அதற்கெல்லாம் ஆளும் கட்சி தரப்பினர் பதில் சொல்லியே ஆக வேண்டும். எதிர்ப்புகள் அனைத்தையும் பணம் கொடுத்து சரி செய்து விடலாம் என நினைத்தால் நிச்சயம் நடக்காது என்றார்.

Related Stories: