வெயிலின் உக்கிரத்தால் உப்பு உற்பத்தி அதிகரிப்பால் தொழிலாளர்கள் மகிழ்ச்சி

சாயல்குடி, மார்ச் 14: ராமநாதபுரம் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், உப்பு உற்பத்தியும் அதிகரித்துள்ளது.ராமநாதபுரம் மாவட்டத்தில் தொண்டி, தேவிபட்டிணம், திருப்பாலைக்குடி, சம்பை, கோப்பேரிமடம், திருப்புல்லாணி மற்றும் வாலிநோக்கம், மாரியூர் உள்ளிட்ட கடற்கரை சுற்று வட்டார பகுதிகளில் அதிகளவில் உப்பளங்கள் உள்ளன. கடந்த சில மாதங்களாக காலநிலை காரணமாக உப்பு உற்பத்தி குறைந்தது. தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால் உப்பு உற்பத்தி அதிகரித்துள்ளதால், உப்பளங்கள் அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து வருவதால் உப்பள தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.மேலும் வாலிநோக்கம்-மாரியூர் கூட்டு அரசு உப்பு நிறுவனத்திற்கு சொந்தமாக சுமார் 400 ஏக்கர் நிலப்பரப்பில் உப்பளம் உள்ளது. இதில் உற்பத்தியாகும் உப்பு இயற்கை முறையில் அயோடின் கலந்து தயாரிக்கப்படுவதால், அரசு கொள்முதல் போக வெளி மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யும் அளவிற்கு லாபத்துடன் இயங்கி வருகிறது. கடந்த சில மாதங்களாக தட்பவெப்பநிலை காரணமாக உப்பளத்தில் உப்பு உற்பத்தி குறைந்தது. இதனால் நிரந்தர தொழிலாளர்களுக்கு மட்டுமே வேலை கிடைத்து வந்தது. தற்காலிக மற்றும் தினக்கூலி தொழிலாளர்களுக்கு முறையாக வழங்காமல் இருந்தது. வழக்கமாக ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் உப்பு உற்பத்தி சூடுபிடிக்கும். தற்போது மார்ச் முதல் வாரம் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் உப்பளம் அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இதுகுறித்து வாலிநோக்கம் அரசு உப்பள தொழிலாளர்கள் கூறும்போது, தற்போது வெயிலின் தாக்கத்தால் உப்பு உற்பத்தி அதிகரித்துள்ளது. இதற்காக உப்பளங்களில் பாத்தி கட்டும் பணிகள் நடந்து வருகிறது, ஆனால் உப்பளத்தில் தொழிலாளர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் கிடையாது. பல்வேறு கிராமங்களில் இருந்து வரும் தொழிலாளர்களின் குழந்தைகள் பள்ளிக்கு செல்ல பேருந்து வசதி கிடையாது. பல ஆண்டுகளாக அரசு உப்பளத்தில் வேலை பார்த்து வந்தாலும் கூட அரசு பணி நிரந்தரம் செய்வது கிடையாது.

எனவே அரசு லாபம் ஈட்டிட, உப்பளத்தில் காயும் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு அம்ச பொருட்கள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள், குடியிருக்க தொகுப்பு வீடுகள், குழந்தைகளுக்கு பள்ளிகூடம், போக்குவரத்திற்கு பஸ் வசதி ஆகியவற்றை ஏற்படுத்தி தர இந்த அரசு முன்வரவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: