பணப்பட்டுவாடாவை தடுக்க 24 மணி நேரமும் விழிப்புடன் தயாராக பறக்கும் படையினர்

ராமநாதபுரம், மார்ச் 14: மக்களவை தேர்தலையொட்டி மூன்று ஷிப்டுகளாக பறக்கும் படையினர் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.தமிழகம் முழுவதும் வருகிற ஏப்.18ல் ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான அறிவிப்பு மார்ச் 10ல் வெளியானதை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. பல்வேறு நடத்தை விதிகளில் வாகன பரிசோதனையே முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. வாகனங்கள் மூலமாக எடுத்துச் செல்லப்பட்டு பணப்பட்டுவாடா செய்யப்படுவதை தடுக்க மாவட்டத்தில் உள்ள செக்போஸ்ட்களில் வாகன பரிசோதனை நடந்து வருகிறது.மாவட்டத்தில் பரமக்குடி, ராமநாதபுரம்,திருவாடானை, முதுகுளத்தூர் ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. பல்வேறு புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்டம் முழுவதும் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தாசில்தார் தலைமையில் ஒரு எஸ்ஐ, இரண்டு போலீசார், ஒரு வீடியோ கிராபர் இப்படையில் பணிபுரிவர்.

சுழற்சி முறையில் 8 மணி நேரத்திற்கு ஒரு முறை பறக்கும் படை மாற்றப்படும். இவர்கள் புகார் வரும் இடங்களுக்கு சென்று உடனடியாக ஆய்வு செய்வர். பகல் மற்றும் இரவு நேரங்களில் தீவிர வாகன பரிசோதனை நடந்து வருகிறது. 24 மணி நேரமும் கண்காணிப்பில் ஈடுபடும் வகையில் மூன்று ஷிப்டுகளாக பறக்கும் படையினர் பிரிக்கப்பட்டு பணியாற்றி வருகின்றனர்.தேர்தல் அலுவலர் ஒருவர் கூறியதாவது, பறக்கும் படையினர் புகார்கள் கூறப்படும் பகுதிக்கு எந்த நேரமும் செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பறக்கும்படை வாகனங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படும். தேர்தலுக்கு இன்னும் கால அவகாசம் உள்ளதால் வாகன சோதனையில் அதிகமான நெருக்கடி கொடுக்கப்பட வில்லை. சில இடங்களில் சுழற்சி முறையில் வாகன சோதனை நடத்தி வருகிறோம். ஆனால் 24 மணி நேரமும் பறக்கும் படையினர் ஏதேனும் ஒரு பகுதியில் பணியில் இருப்பார்கள். தேர்தல் நெருங்கும் வேளையில் வாகன சோதனை தீவிரப்படுத்தப்படும் என்றார்.

முதுகுளத்தூரில் அதிரடி

பாராளுமன்ற தேர்தல் விதிமுறைகள் நடைமுறை படுத்திய பிறகு முதுகுளத்தூர் தொகுதியிலுள்ள கடலாடி, முதுகுளத்தூர், கமுதி ஆகிய மூன்று தாலுகாகளில் அரசு திட்டம் குறித்த விளம்பரங்கள், அரசியல் கட்சி விளம்பரங்கள், நோட்டீஸ்கள் போன்றவற்றை வருவாய் துறையினர் அகற்றி வருகின்றனர்.கடலாடியில் தாசில்தார் பரமசிவம் தலைமையிலான வருவாய் துறையினர் கடலாடி, சாயல்குடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்த அரசியல் கட்சி பேனர்கள், நோட்டீஸ்களை அகற்றினர். இதில் வருவாய் ஆய்வாளர் மாலதி உள்ளிட்ட வருவாய் துறையினர் கலந்து கொண்டனர், கமுதியில் தாசில்தார் கல்யாணகுமார், முதுகுளத்தூரில் தாசில்தார் மீனாட்சி தலைமையிலான வருவாய் துறையினர் கிராம பகுதிகளுக்குச் சென்று விளம்பரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

இதனை போன்று முதுகுளத்தூர் தொகுதியில் அமைக்கப்பட்ட மூன்று பறக்கும் படையினர் முதுகுளத்தூர், கமுதி, கடலாடி, சாயல்குடி பகுதியில் ரோந்து பணி மற்றும் வாகன சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories: