கொளுத்தும் வெயிலால் வெளியில் வர மக்கள் அச்சம்

ராமநாதபுரம், மார்ச் 14: கோடை கால துவக்கத்திலேயே அதிகப்படியாக கொளுத்தும் வெயிலால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக போதிய மழை இல்லாதது, காலம் தவறிய பருவ மழை உள்ளிட்டவைகளால் நீர் நிலைகள் அனைத்தும் வறண்டு காணப்படுகிறது. மார்ச் முதல் ஜுன் வரை வெயில் இருந்தாலும் அக்னி நட்சத்திர காலத்தில் மட்டுமே கடுமையான வெயில் இருக்கும். ஆனால் இந்த ஆண்டு கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பிருந்தே கடுமையான வெயில் அடிக்க தொடங்கியது.அக்னி நட்சத்திர காலம் மே மாதத்தில் வரவுள்ள நிலையில் தற்போதே கடுமையான வெயில் உள்ளது. அக்னி நட்சத்திர காலத்தில் 36 முதல் 38 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் இருக்கும். ஆனால் மாவட்டத்தில் தற்போதே அதே அளவிலான வெப்பத்தின் தாக்கம் காணப்படுகிறது.

வெயிலின் தாக்கத்தை குறைப்பதற்கான நீர் கண்மாய், குளங்கள் உள்ளிட்டவைகளில் இல்லை. இதனால் பகலில் உக்கிரமாக, சாலைகளில் மக்கள் செல்ல முடியாத அளவிற்கு வெயில் உள்ளது. காலை மாலை நேரங்கள் தவிர மற்ற நேரங்களில் நகர்ப்பகுதிகள், பிரதான சாலைகள் கூட ஆள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது. அனைத்து பணிகளையும் விரைவாகவே முடித்துவிட்டு வெயிலுக்கு முன் வீட்டுக்கு சென்றுவிட வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.சமூக ஆர்வலர்கள் கூறியதாவது, மாவட்டத்தில் உள்ள ஏராளமான குளங்கள், கண்மாய்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன. பராமரிப்பின்றியும், நீர் வரத்து இல்லாமலும் நீர்நிலைகள் பாதிப்படைந்துள்ளன. விவசாய நிலங்கள் குறைந்து கொண்டே வருவதால் சீமைக்கருவேல மரங்கள் அதிகரித்து வருகிறது. இயற்கையை பாதுகாக்காமல் இருப்பதன் விளைவுதான் கடுமையான வெப்ப நிலை. இன்னும் ஆண்டுகள் செல்ல, செல்ல வெப்பமயமாதல் கூடும் என்பதே உண்மை. மரம் வளர்ப்பு, நீர் சேமிப்பு உள்ளிட்ட இயற்கையை பாதுகாக்கும் நடவடிக்கைகளின் மூலமே இதுபோன்ற பாதிப்புகளை தடுக்க முடியும் என்றனர்.

Related Stories: