போக்குவரத்திற்கு இடையூறு வாரச்சந்தை வேறு இடத்திற்கு மாற்றப்படுமா?

சாயல்குடி, மார்ச் 14: முதுகுளத்தூர் வாரச்சந்தை சாலையோரம் இருப்பதால் விபத்து ஏற்படும் அபாயம் மற்றும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் மாற்று இடத்தில் சந்தையை நடத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.முதுகுளத்தூர் தாலுகாவில் பெரிய வாரச்சந்தையாக முதுகுளத்தூர் விளங்குகிறது. இந்த சந்தை வாரந்தோறும் வியாழக்கிழமையில் நடந்து வருகிறது. சுமார் 200க்கும் மேற்பட்ட கிராமமக்கள் சந்தை பொருட்களை வாங்கி செல்வதற்காக வந்து செல்கின்றனர். இச்சந்தை முதுகுளத்தூர் பேருந்து நிலையம் அருகே உள்ள சந்தைபேட்டைக்குள் நடக்கிறது.கடைகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் பேருந்து நிலைய பிளாட்பாரங்களிலும், பரமக்குடி, சாயல்குடி செல்லும் சாலையிலும் கடையை வியாபாரிகள் அமைக்கின்றனர். இதனால் பேருந்து நிலையத்திற்கு வரும் பேருந்து உள்ளிட்ட வாகனங்கள், அருகிலிருக்கும் வாடகை வாகனங்கள் மற்றும் ஆட்டோக்களில் மோதி விழும் பொதுமக்களுக்கு காயங்கள் ஏற்படுவது நடந்து வருகிறது.

மேலும் சாலையில் நின்றுகொண்டு பொதுமக்கள் சந்தைபொருட்களை வாங்குவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதன் அருகே அரசு மருத்துவமனை இருப்பதால் அவசரத்திற்கு ஆம்புலன்ஸ் கூட செல்ல முடியவில்லை.பேரூராட்சியின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள வாரச்சந்தை கடை வளாகத்திற்குள் கிடக்கும் மீன், பிராய்லர் கோழி, ஹோட்டல், சலூன் கடை கழிவு பொருட்கள் மற்றும் வாரச்சந்தை கழிவு பொருட்கள் சந்தை முடிந்து மறு வாரம் சந்தை நடக்கும் வரை அகற்றப்படாமல் உள்ளது.

இதனால் மருத்துவமனை மற்றும் பேருந்து நிலையத்திற்கு வரும் பொதுமக்களுக்கு சுகாதார கேடு நிலவி நோய்கள் பரவும் சூழல் உள்ளது. மேலும் வாரத்தின் மற்ற நாட்களில் சந்தை வளாகம் சிறுநீர் கழிப்பதற்கும், மது குடிக்கும் பாராகவும் நடந்து வருகிறது.

எனவே பொதுமக்கள் நலன் கருதி விபத்துகள் நடக்கும் முன்பு வாரச்சந்தையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: