தேர்தல் நடத்தும் அலுவலர் நியமிப்பதில் குழப்பம் நீடிப்பு

தேனி, மார்ச் 14: பெரியகுளம், ஆண்டிபட்டி சட்டமன்றத் தேர்தல்களுக்கான தேர்தல் நடத்தும் அலுவலர்கள் யார் என இன்னமும் தேர்தல் ஆணையம் அறிவிக்காததால் இவ்விரு தொகுதிளில் போட்டியிடும் வேட்பாளர்கள் எங்கே, யாரிடம் வேட்பு மனுத்தாக்கல் செய்வது என்பதில் குழப்பம் நீடிக்கிறது.தேனி பாராளுமன்றத் தொகுதி பொதுத்தேர்தல் மற்றும் பெரியகுளம் (தனி) மற்றும் ஆண்டிபட்டி சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகிற ஏப்ரல் 18ம் தேதி நடக்க உள்ளது. இத்தேர்தலில் போட்டியிடுவோர் வருகிற 19ம் தேதி முதல் வருகிற 26ம் தேதி வரை வேட்புமனுத்தாக்கல் செய்யலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வேட்புமனு பரிசீலனை 27ம் தேதியும், வேட்பு மனு வாபஸ் பெற கடைசி நாள் 29ம் தேதியும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.தேனி பாராளுமன்றத் தொகுதித் தேர்தலைப் பொறுத்தவரை தேர்தலில் போட்டியிட விரும்புவோர் தேனி கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து மாவட்ட தேர்தல் அலுவலரிடம் வேட்பு மனுத்தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், பெரியகுளம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் மற்றும் ஆண்டிபட்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல்களை நடத்த தேர்தல் நடத்தும் அலுவலர் இதுவரை தேர்தல் ஆணையம் அறிவிக்கவில்லை. இவ்விருத் தொகுதி இடைத்தேர்தல்களில் போட்டியிட விரும்புவோர் வருகிற 19ம் தேதி வேட்புமனுத்தாக்கல் செய்ய வேண்டிய நிலையில் வேட்பாளர்கள் எங்கே, யாரிடம் வேட்புமனுத்தாக்கல் செய்வது, பெரியகுளம் மற்றும் ஆண்டிபட்டி சட்டமன்றத் தொகுதியில் நடக்கும் தேர்தல் நடத்தை விதி மீறல் குறித்து பாராளுமன்றத் தொகுதிக்கான உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களிடமே புகார் செய்ய வேண்டிய நிலை உள்ளது. இவ்விரு தொகுதிகளுக்கும் தனித்தனி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் அறிவிக்காததால் குழப்பம் நீடிக்கிறது.

Related Stories: