குஜிலியம்பாறை சாலையில் அதிக லோடுடன் பறக்கும் டிப்பர் லாரிகள்

குஜிலியம்பாறை, மார்ச் 14: குஜிலியம்பாறை சாலையில் மைன்ஸ் கற்களை அதிகமாக ஏற்றி அசுர வேகத்தில் செல்லும் டிப்பர் லாரிகளால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. குஜிலியம்பாறை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட வேண்டும் என பொதுமக்கள்

வலியுறுத்துகின்றனர். திண்டுக்கல்-கரூர் மாநில நெடுஞ்சாலையின் மையப்பகுதியில் குஜிலியம்பாறை அமைந்துள்ளது. குஜிலியம்பாறை மற்றும் அதனை சுற்றியுள்ள பாளையம், மேட்டுக்களத்தூர், சி.சி.சி.குவாரி, உல்லியக்கோட்டை, மல்லப்புரம், கரிக்காலி ஆகிய பகுதிகளில் தனியாருக்கு சொந்தமாக ஏராளமான மைன்ஸ்கள் உள்ளன. இந்த மைன்ஸ்களில் வெட்டி எடுக்கப்படும் கற்கள் டிப்பர் லாரிகள் மூலம் வெளியில் கொண்டு செல்லப்படுகிறது. இவ்வாறு டிப்பர் லாரிகளில் கொண்டு செல்லப்படும் மைன்ஸ் கற்கள் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மட்டுமே கொண்டு செல்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் தனியார் மைன்ஸ் நிர்வாகத்தினர் அளவுக்கு அதிகமாக கற்களை டிப்பர் லாரிகளில் ஏற்றி செல்கின்றனர். இவ்வாறு அளவுக்கு அதிகமாக ஏற்றிச் கொண்டு சாலையில் டிப்பர் லாரிகள் செல்லும் போது, அதே சாலையின் பக்கவாட்டில் டூவீலர் ஓட்டிச் செல்பவர்கள் மற்றும் சாலையில் நடந்து செல்பவர்கள் தலையில் விழும் அபாய நிலை உள்ளது. அவ்வாறு தலையில் விழுந்தால் உயிர்பலி ஏற்படுவது நிச்சயம்.

இதனால் குஜிலியம்பாறை சாலையில் டூவீலர் செல்பவர்களும், சாலையில் நடந்து செல்பவர்களும் அச்சத்துடன் உள்ளனர். மேலும் காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளிக்கு சைக்கிளில் செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் நர்சரி பள்ளி குழந்தைகளை டூ வீலரில் அழைத்து செல்லும் பெற்றோர்களும் பெரும் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.  எனவே உயிர்ப்பலி ஏற்படும் முன்பாக அளவிற்கு அதிகமாக மைன்ஸ் கற்களை ஏற்றிச் செல்லும் லாரிகளை வாகன தணிக்கையில் குஜிலியம்பாறை போலீசார் ஈடுபட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: