மனைவியுடன் ரவுடி கொல்லப்பட்ட சம்பவம் பயங்கர ஆயுதங்களுடன் 11 பேர் கைது

திண்டுக்கல், மார்ச் 14:  திண்டுக்கல்லில் நாட்டு வெடிகுண்டுகளை வீசி மனைவியுடன் ரவுடி வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் 11 பேர் கைது செய்யப்பட்டனர். கைதானவர்கள் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர். திண்டுக்கல் பாறைப்பட்டியை சேர்ந்தவர் பிரபல ரவுடி திருப்பூர் பாண்டி(46). இவரது மனைவி பஞ்சவர்ணம்(40). இவர்கள் இருவரும் கடந்த மார்ச் 11ல் திண்டுக்கல் நல்லாம்பட்டியில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி இருந்தனர். அப்போது 19 பேர் கொண்ட கும்பல் நாட்டு வெடிகுண்டுகளை வீசி, இருவரையும் சரமாரியாக வெட்டி கொலை செய்தனர். பட்டப்பகலில் நடந்த சம்பவம் பொதுமக்களிடம் பீதியை உண்டாக்கியது.  இந்த கொலையில் தொடர்புடையவர்களை பிடிக்க தாலுகா இனஸ்பெக்டர் ஜெயராமன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு இருந்தது. இது தொடர்பாக திண்டுக்கல் பாறைப்பட்டியை சேர்ந்த சிவக்குமார்(27), விக்னேஷ்(24), மணி(25), ரங்கநாதன்(23), செல்வக்குமார்(24), நந்தகுமார்(22) ஆகியோரை போலீசார் முதல் கட்டமாக கைது செய்தனர். இதனிடையே நேற்று இரவு திண்டுக்கல் கொடைப்பார்பட்டியை சேர்ந்த சக்திவேல்(25), கோபி(24), பிரபாகரன்(23), தினேஷ்(24), நாகராஜ்(25) ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து மீன் அறுக்கும் கத்தி, பெரிய வீச்சரிவாள், இரும்பு கம்பிகள் உட்பட பல ஆயுதங்களை கைப்பற்றினர்.  

கைதானவர்கள் கொடுத்த வாக்குமூலம் குறித்து போலீசார் கூறுகையில், ‘‘திருப்பூர் பாண்டியின் உறவு பெண் சுகன்யாவும் பெரியகுளத்தை சேர்ந்த முருகன் என்பவரும் காதலித்தனர்.  இவர்களின்  காதலை திருப்பூர் பாண்டி பிரித்து, முருகனை தாக்கியுள்ளார்.

இதனால் முருகனின் நெருங்கிய உறவினர்களான அருண்பாண்டியும், கோபிநாதனும் திருப்பூர் பாண்டியுடன் மோத வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இருதரப்பும் அடிக்கடி மோதி வந்தனர். இந்த பகையில் கோபிநாதனின் ஆதரவாளரான குமரேசன் கொலை செய்யப்பட்டார். இந்த  கொலைக்கு திருப்பூர் பாண்டியின் மகன்கள் சந்திரசேகர், அசோக்குமார் ஆகியோர் காரணம் என கூறப்படுகிறது. எனவே இவர்களை பழிக்கு பழிவாங்க கொலையான குமரேசன் உறவினர் சிவக்குமார் மற்றும் அவரது நண்பர்கள் திட்டமிட்டு வந்தனர். திருப்பூர் பாண்டி தனது மகன்களுடன் கோவையில் இருந்து திண்டுக்கல் நல்லாம்பட்டிக்கு விசேஷத்திற்கு வருவதை கொலை கும்பல் நோட்டமிட்டுள்ளது. இதனால் மூன்று நாட்களாக நல்லாம்பட்டியில் முகாமிட்டு நோட்டம் விட்டனர். திருப்பூர் பாண்டியின் மகன்களை கொலை செய்ய திட்டமிட்டனர்.  ஆனால் சென்ற இடத்தில்  கணவனும், மனைவியும் பலியாகியுள்ளனர்’’ என்று தெரிவித்தனர்.  

* காதலை பிரித்ததால் ஆரம்பித்தது பகை

* மகன்களுக்கு வைத்த குறியில் பெற்றோர் சிக்கினர்

* போலீசிடம் பரபரப்பு வாக்குமூலம்

Related Stories: