விவசாயிகள் பிரச்னைகளை தீர்க்க வேட்பாளர்கள் வாக்குறுதி அளிக்க வேண்டும்

ஊட்டி, மார்ச் 14: நீலகிரி மாவட்ட விவசாயிகள், மக்களின் பிரச்னைகளை தீர்க்க வேட்பாளர்கள் வாக்குறுதி அளிக்க வேண்டும் என பொதுமக்கள்  வலியுறுத்தியுள்ளனர்.  நீலகிரி மாவட்ட கற்பூர தைலம் உற்பத்தியாளர்கள், தொழிலாளர்கள் மற்றும் இலை சேகரிப்போர் நலச்சங்கத்தின் பொதுச் செயலாளர் பத்மநாபன் கூறியிருப்பதாவது: நீலகிரி மாவட்டத்தில் கற்பூர தைலம் உற்பத்தி செய்யும் தொழிலில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபடுகின்றனர். இத்தொழில் தற்போது நலிவடைந்து உள்ளது. இதனைமேம்படுத்த, தொழில் சார்ந்த மக்களை பாதுகாக்க பிரதிநிதிகள் யாரும் முன்வரவில்லை.தற்போது சீனாவில் இருந்து யூகாலிப்ட் தைலம் இறக்குமதி செய்யப்படுவதால், நீலகிரி தைலம் விலை வீழ்ச்சியை கண்டுள்ளது. இதனால், இத்தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.  பசுந்தேயிலைக்கு உரிய விலை கிடைப்பதில்லை. இதனால் கடந்த 25 ஆண்டாக சிறு விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். நீலகிரியில் உற்பத்தி செய்யப்படும் மலை காய்கறிகளுக்கும் உரிய விலை கிடைப்பதில்லை. தற்போது வன விலங்குகளும் விவசாய நிலங்களை துவம்சம் செய்து வருகின்றன.

இதனால், காய்கறி விவசாயிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஊட்டி, தேயிலை, கட்டுமான தொழிலாளர்களுக்கு பாதுகாப்பில்லாத மாவட்டமாக தற்போது நீலகிரி விழங்குகிறது. இதேபோல் முக்கிய இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். ஏழை எளிய மக்களுக்கு பட்டா நிலம் மற்றும் செக்ஷன் 17 போன்ற பல்வேறு பிரச்னைகளால் நீலகிரி மாவட்ட மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இது போன்ற பல்வேறு பிரச்னைகளை கருத்தில் கொண்டு பாராளுமன்ற தேர்தலில் நீலகிரி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் பொதுமக்களின் பிரச்னைகளை கருத்தில் கொண்டு அதனை நிறைவேற்றும் வகையில் வாக்குறுதிகளை அளிப்பதோடு மட்டுமின்றி, வெற்றி பெற்றால் அதனை நிறைவேற்ற வேண்டும்’’.

இவ்வாறு பட்பயர் பத்மநாபன் கூறினார்.

Related Stories: