15 ஆண்டாக செயல்பாட்டுக்கு வராத சூரம்பட்டி பேருந்து நிலையம்

ஈரோடு, மார்ச். 14:   ஈரோடு அருகே சூரம்பட்டியில் உள்ள பஸ் ஸ்டாண்ட் கடந்த 15 ஆண்டுகளாக  செயல்படாத நிலையில் இருந்து வருகிறது. இதனால், இங்கு சமூக விரோத செயல்கள்  நடப்பதாக மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர். ஈரோடு மாநகராட்சி 3வது  மண்டலத்திற்குட்பட்ட சூரம்பட்டிவலசு பகுதியில் பொதுமக்களுக்காக கடந்த  2003ம் ஆண்டு ஒருங்கிணைந்த சிறிய மற்றும் நடுத்தர வளர்ச்சி திட்டத்தின்கீழ்  53 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக பஸ் ஸ்டாண்ட் கட்டப்பட்டது. இங்கு  40க்கும் மேற்பட்ட கடைகளுடன் கூடிய வணிக வளாகமும் கட்டப்பட்டது. இந்த பஸ்  ஸ்டாண்ட் கட்டப்பட்ட பிறகு சூரம்பட்டி பகுதிக்கு வரும் அனைத்து பஸ்களும்  இந்த பஸ் ஸ்டாண்டிற்கு வந்து விட்டு செல்லும் வகையில் செயல்படுத்தப்பட்டது. ஆனால்,  இந்த பஸ் ஸ்டாண்ட் கட்டப்பட்டு 15 ஆண்டுகள் ஆன நிலையில் இதுவரை ஒரு பஸ்  கூட இங்கு வரவில்லை. சூரம்பட்டி பகுதிக்கு வரும் அனைத்து பஸ்களும்  வழக்கம்போலவே பஸ் ஸ்டாண்டின் வெளிப்பகுதியிலேயே சாலையோரம் நின்று  செல்கிறது.பஸ் ஸ்டாண்டிற்குள் பஸ் வராததால் அங்குள்ள கடைகள் போதிய  வருவாய் இல்லாமல் பூட்டியே கிடக்கிறது. இதனால், மாநகராட்சி நிர்வாகத்திற்கு  பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது.

பஸ் ஸ்டாண்ட் பகுதியில் உள்ள  கட்டிடங்கள் அனைத்தும் சிதிலமடைந்து காணப்படுகிறது. பஸ் ஸ்டாண்டில்  பெரும்பாலான பகுதி குப்பை கொட்டும் இடமாக மாறி விட்டது. பயன்பாடற்ற  நிலையில் உள்ள இந்த பஸ் ஸ்டாண்டில் பகல் நேரத்திலேயே கஞ்சா, மது விற்பனை  தாராளமாக நடந்து வருவதாக மக்கள் குற்றம் சாட்டி உள்ளனர். பகலில்  குடிமகன்கள் குடித்து விட்டு பஸ் ஸ்டாண்டிலேயே படுத்து தூங்குகின்றனர். இதுகுறித்து  பொதுமக்கள் கூறுகையில், சூரம்பட்டி நகராட்சியாக இருந்தபோது சூரம்பட்டி  பகுதிக்கு வரும் பஸ்களை நிறுத்தி செல்வதற்காக இந்த பஸ் ஸ்டாண்ட்  கட்டப்பட்டது. மேலும் நகராட்சிக்கு வருவாய் ஈட்டும் வகையில் வணிக  வளாகங்களும் கட்டப்பட்டது. ஆனால், இந்த பஸ் ஸ்டாண்ட் இதுவரை  செயல்பாட்டிற்கு வரவில்லை. தற்போது சூரம்பட்டி நகராட்சி ஈரோடு  மாநகராட்சியோடு இணைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த பஸ் ஸ்டாண்டை  செயல்பாட்டிற்கு கொண்டு வர எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனர்.

பஸ்  ஸ்டாண்ட் செயல்பாட்டிற்கு வராத நிலையில் இங்குள்ள கடைகளை ஏலம் விடுவதிலும்  சிக்கல் ஏற்பட்டுள்ளது. பயன்பாடற்ற இந்த பஸ் ஸ்டாண்டில் காலை நேரத்திலேயே  கஞ்சா, மது விற்பனை தாராளமாக நடந்து வருகிறது. இதை தடுக்க வேண்டிய  போலீசாரும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனர். சமூகவிரோதிகளின்  கூடாரமாக மாறி வரும் இந்த பஸ் ஸ்டாண்டில் பஸ்களை விடவும், மாநகராட்சிக்கு  வருவாயை ஈட்டும் வகையில் கடைகளை ஏலம் விடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’  

என்றனர்.

Related Stories: