பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை துவக்கம்

கோவையில் 40 ஆயிரம் பேர் எழுதுகின்றனர்

கோவை, மார்ச் 14: பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நாளை துவங்குகிறது. இந்த தேர்வினை கோவை மாவட்டத்தில் 146 மையங்களில் 40 ஆயிரத்து 698 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர்.  தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நாளை துவங்குகிறது. 29ம் தேதி வரை இந்த தேர்வு நடக்கிறது. தேர்வு முடிவுகள் ஏப்ரல் 29ம் தேதி வெளியிடப்படுகிறது. இதில், தமிழ், ஆங்கிலம் ஆகிய தேர்வுகள் மதியமும், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களுக்கான தேர்வுகள் காலையில் நடக்கிறது. நாளை மொழிப்பாடத்திற்கான முதல் தாள் தேர்வு நடக்கிறது. இதனை கோவை மாவட்டத்தில் உள்ள 540 பள்ளிகளை சேர்ந்த 40 ஆயிரத்து 698 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர். தேர்வு 146 மையங்களில் நடக்கிறது. தேர்வு மையங்களில் மாணவர்களுக்கான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளது. தேர்வு பணியில் 3,500 ஆசிரியர்கள் ஈடுபடுகின்றனர். மாணவர்கள் முறைகேடுகளில் ஈடுபடுவதை கண்காணிக்க 230 பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.

Related Stories: