உலக மகளிர் தினவிழா

கோவை, மார்ச் 14: கோவை அரசு கலைக்கல்லூரியின் ஆழி மகளிர் மேம்பாட்டு நலச்சங்கம் சார்பில், உலக மகளிர் தினவிழா கல்லூரி வளாகத்தில் நேற்று நடந்தது. விழாவுக்கு, அரசு கலைக்கல்லூரி முதல்வர் சித்ரா தலைமை வகித்தார். ஆழி மகளிர் மேம்பாட்டு நலச்சங்க தலைவர் உமாதேவி வரவேற்றார். செயலர் பூங்கொடி முன்னிலை வகித்தார். பொருளாளர் தேன்மொழி ஆண்டறிக்கை வாசித்தார்.

இதில், சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு மகளிர் ஆணைய உறுப்பினர் ஜூலியட் செல்வி வீரபத்ரன் பேசுகையில், ‘‘மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில், தமிழகத்தில் பெண் சிசு கொலை குறைந்துள்ளது. ஒரு ஆணுக்கு 9.6 என்ற அளவில் பெண்கள் இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இது ஆண், பெண் சமநிலையற்ற தன்மையை காட்டுகிறது. ஆண், பெண் சமநிலை ஏற்பட வேண்டும். பெண்களுக்கு கல்வி, பணிபுரியும் இடங்களிலும் சுதந்திரம் பறிக்கப்பட்டு வருகிறது. கல்வி நிலையங்கள், பணியாற்றும் இடங்களில் பெண்களுக்கு பாலியல் தொந்தரவு இருந்தால் தைரியமாக முன்வந்து புகார் அளிக்க வேண்டும். நடவடிக்கை எடுக்காவிட்டால் மகளிர் ஆணையத்தில் புகார் தெரிவிக்கலாம். உரிய நீதி பெற்றுத்தரப்படும்,’ என்றார்.விழாவில், குழந்தைகள் மற்றும் குடும்ப நல ஆலோசகர் கோதனவள்ளி, சமூக நலத்துறை அலுவலர் அருணா மற்றும் பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் என பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: