வனப்பகுதியில் இருந்து பழங்குடியினரை வெளியேற்றும் உத்தரவை ரத்து செய்ய வலியுறுத்தல்

ஈரோடு, மார்ச் 14: பழங்குடி  மக்களை வனத்தில் இருந்து வெளியேற்றும் உச்சநீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்ய  வலியுறுத்தி சத்தியமங்கலத்தில் தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கம், வாழ்வு  மற்றும் சுயமரியாதைக்கான பிரசார இயக்கம் சார்பில் கூட்டம் நடந்தது.

மாநில  ஒருங்கிணைப்பாளர் செல்வராஜ் தலைமை வகித்தார். கன்னியாகுமரி ஆதிவாசி மகாசபா  சங்க தலைவர் ராஜன், பொதிகை மலை காணிக்காரன் முன்னேற்ற சங்க தலைவர்  ஆறுமுகம், கொடைக்கானல் ஆதிவாசி சங்க அமைப்பாளர் சிவாசாந்தகுமார் ஆகியோர்  கலந்து கொண்டனர்.கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:தேசிய  அளவில் பழங்குடி மக்கள் மற்றும் மலைவாழ் மக்களை, வனங்களில் இருந்து  வெளியேற்ற, உச்சநீதிமன்றம் விதித்துள்ள உத்தரவை நிரந்தரமாக ரத்து செய்ய  வேண்டும். அவர்களது வாழ்வாதாரம் காக்கப்பட வேண்டும். இக்கோரிக்கையை  வலியுறுத்தி, பழங்குடி மக்களிடம் கையெழுத்து பெற்று, நாடாளுமன்ற தேர்தல்  பிரசாரத்துக்கு வரும் வேட்பாளர்களிடம் வலியுறுத்தப்படும். சிறு, குறு  விவசாயிகளுக்கு மத்திய அரசு அறிவித்துள்ள ஆண்டுக்கு ரூ.6,000 வழங்கும்  திட்டத்தில் வன உரிமை சட்டப்படி நிலப்பட்டா பெற்றவர்களுக்கும் வழங்க  வேண்டும். வன நிலங்களுக்கு நிலப்பட்டா கோரும் மனுக்களை நிராகரிக்கும்  உரிமை, வன உரிமை சட்டப்படி அமைக்கப்பட்ட கிராமசபைக்கே உண்டு.

நாடு  முழுவதும், பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட நிலப்பட்டா கோரும் மனுக்களை  சட்டத்துக்கு புறம்பாக அதிகாரிகளே நிராகரித்துள்ளனர். எனவே, அம்மனுக்களை  மீண்டும் கிராம சபைக்கே திருப்பி அனுப்பி, மறுபரிசீலனை செய்ய வேண்டும்   என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Stories: