கோபி நகரில் குப்பைகளுக்கு தீயிடுவதால் மக்கள் அவதி

கோபி, மார்ச் 14:   கோபி நகராட்சி பகுதியில் உள்ள 30 வார்டுகளிலும் நாள்தோறும் சேகரிக்கப்படும் சுமார் 30 டன் குப்பையை நாய்க்கன்காட்டில் உள்ள நகராட்சி குப்பை கிடங்கில் கொட்டி வந்தனர். இந்நிலையில் குப்பை கிடங்கு நிரம்பி 40 அடி உயரத்திற்கு மலை போல் குவிந்ததை தொடர்ந்து அவ்வப்போது நகராட்சி நிர்வாகத்தினர் தீ வைத்து எரித்து வந்தனர்.  இந்நிலையில் குப்பை கிடங்கில் தீவைப்பதால் கடுமையான சுகாதார கேடு ஏற்பட்டதுடன், நாய்க்கன்காடு, கரட்டூர், டி.ஆர்.நகர், பார்வதிநகர், மேட்டுவலுவு உள்ளிட்ட பல்வேறு பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் குப்பை கிடங்கை வேறு இடத்திற்கு மாற்ற பொதுமக்கள் கடந்த சில ஆண்டுகாளக போராட்டம் நடத்தி வந்தனர்.   இருப்பினும் குப்பை கிடங்கை மாற்றம் செய்யாத நிலையில் கடந்த மாதம் குப்பை கிடங்கு பூட்டப்பட்டது. இதனால் நகர் பகுதியில் தேங்கும் குப்பையை குடியிருப்பு பகுதியிலேயே கொட்டி வைத்துள்ள நகராட்சி நிர்வாகம் நாள்தோறும் குப்பையை தீவைத்து எரித்து வருகின்றனர்.

  அதனை ெதாடர்ந்து நேற்று முன்தினம் இரவு மேட்டுவலுவில் நள்ளிரவு நேரத்தில் தீவைத்ததால் தீ அருகில் இருந்த பகுதிகளுக்கும் பரவியது. அதைத்தொடர்ந்து தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.  அதே போன்று நேற்று காலை பார்வதி நகர் பிரிவு அருகே சுமார் 2 டன் அளவிற்கான குப்பையை மூட்டையாக கட்டிவைத்து தீவைத்துவிட்டனர். இதனால் அந்த வழியாக வாகனங்களில் சென்றவர்கள், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் கடுமையான புகை மூட்டத்தால் பெரிதும் அவதிப்பட்டதுடன் விபத்து ஏற்படும் சூழ்நிலையும் ஏற்பட்டது.  இகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘கடந்த ஒரு மாத காலமாக நகர் பகுதி முழுவதும் குப்பையை அகற்றாமல் குடியிருப்பு பகுதியிலேயே தீவைத்து அழித்து வருகின்றனர்.

  இதனால் கடுமையான சுகாதார கேடு ஏற்படுவதுடன், நகர் பகுதி முழுவதும் மூச்சுத்திணறலும் ஏற்படுகிறது. மேலும் நகர் பகுதியில் குப்பையை தீவைத்து எரித்தால் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம்’ என்றனர்.

Related Stories: