திருச்செங்கோடு அருகே தார்சாலை பணியை நிறுத்திய பொதுமக்கள்

திருச்செங்கோடு, மார்ச் 14: திருச்செங்கோடு அடுத்த சீனிவாசம்பாளையத்தில் தரமில்லாமல் அமைக்கப்பட்ட தார்சாலை பணியை பொதுமக்கள் தடுத்து நிறுத்தினர். திருச்செங்கோடு ஒன்றியம் சீனிவாசம் பாளையம் கிராமத்தில் அம்மன் கோவில் முதல் தண்ணீர் பந்தல்பாளையம் வரை 1 கிலோ மீட்டர் தார் சாலையும், தண்ணீர் பந்தல் பாளையம் முதல் கருவேப்பம்பட்டி வரை சுமார் 1 கிலோ மீட்டர் தார்சாலை அமைக்கும் பணி நெடுஞ்சாலைத் துறை சார்பில் நடந்து வருகிறது. இந்த தார்சாலை அமைக்கும் பணியை சேலத்தை சேர்ந்த  தனியார் நிறுவனத்தினர் ஒப்பந்தம் எடுத்து செய்து வருகின்றனர். 3.75 மீட்டர் அகலம் உள்ள இந்த தார் சாலை ஓடிஆர் வகை சாலை என கூறப்படுகிறது. சீனிவாசம் பாளையம் ஏரி வரை அமைக்கபட்ட தார்சாலையை கையால் நோண்டினாலே சாலை பெயர்ந்து வருவதாக கூறி அப்பகுதி மக்கள் சாலை அமைக்கும் பணியை நேற்று தடுத்து நிறுத்தினர். மேலும் தார்சாலை அமைக்கும் பணி ஆணையை காண்பித்துவிட்டு வேலை செய்யுமாறு பொதுமக்கள் வாக்குவாதம் செய்ததால் தார்சாலை அமைக்கும் பணி பாதியில் நிறுத்தப்பட்டது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், கையால் நோண்டினாலே தார்சாலை பெயர்ந்து வருகிறது. பல இடங்களில் சாலையில் வெடிப்பு காணப்படுகிறது. பழைய சாலையை முற்றிலும் அகற்றிவிட்டு புதிய சாலை போடாமல் ஆங்காங்கே சாலையை பெயர்த்து விட்டு பெயரளவில் தார்சாலை அமைத்துள்ளதால், நீண்ட காலத்திற்கு இந்த சாலை இருக்காது. தார்சாலை அமைக்க, தார் கலந்த சிறு ஜல்லிகள் சேலத்தில் இருந்து கொண்டு வரப்படுவதால் அது இங்கு வருவதற்குள் சூடு தணிந்து இறுகி விடுகிறது. இதனால், தார்சாலை பணியை பாதியிலேயே நிறுத்திவிட்டோம் என்றனர். இதுகுறித்து ஒப்பந்த பணியாளர்களிடம் கேட்டபோது, பணி ஆணையில் உள்ளவாறு தான் தார்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. பணி முடிவடைந்த பின் தார்சாலையின் தரத்தை பொதுமக்கள் சோதனை செய்து பார்த்துக் கொள்ளலாம் என்றனர்.

Related Stories: