பொள்ளாச்சி இளநீர் விற்பனை ஜோர்

நாமக்கல், மார்ச் 14:சேலம், நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வெப்பக்காற்று வீசுவதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே வருவதால், கோடை தாகத்தை தீர்க்க மக்கள் பழரசங்களை பருகி உடல் சூட்டை தனித்து வருகின்றனர். வெயிலில் அதிக நேரம் சுற்றுவதால் நீர்சத்துகள் குறைந்து விடுகிறது. உடலுக்கு உடனடி உற்சாகத்தையும் தருவதற்கு இளநீர் குடிப்பது தற்போது அதிகரித்துள்ளது. நாமக்கலில் மோகனூர், சேந்தமங்கலம் மற்றும் காட்டுப்புத்தூர் பகுதிகளிலிருந்து இளநீர் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. ₹20 முதல் ₹30 வரை விற்பனை செய்யப்படும் இப்பகுதி இளநீரில் குறைந்த அளவே நீர் இருப்பதால் பொள்ளாச்சி பகுதி இளநீரை வியாபாரிகள் அதிகளவில் விற்பனை செய்கின்றனர். இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், ‘கோவை மாவட்டம் பொள்ளாச்சி, ஆழியார், மீனாட்சிபுரம், கோவிந்தரஜபுரம், வேட்டைக்காரன்புதூர் மற்றும் ஆனைமலை உள்ளிட்ட பகுதிகளிலிருந்தும் இளநீர் நாமக்கல்லுக்கு விற்பனைக்காக வருகிறது. நாமக்கல் பகுதிகளில் இந்த இளநீரானது ₹40 வரை விற்பனை செய்யப்படுகிறது. இங்கிருந்து வரும் இளநீரில் தண்ணீர் அதிகமாக உள்ளதால் பொதுமக்கள் பொள்ளாச்சி இளநீரை அதிகம் குடித்து வருகின்றனர். வெயிலின் தாக்கம் அதிகரிக்க அதிகரிக்க நாமக்கல்லில் பொள்ளாச்சி இளநீர் விற்பனை அதிகரிக்கும்,’ என்றனர்.

Related Stories: