ஜாதி, மதம், மொழிகளை கூறிவாக்குகள் கேட்கக் கூடாது காரைக்கால் மாவட்ட சப்-கலெக்டர் அறிவுறுத்தல்

காரைக்கால், மார்ச் 14: வரும் பாராளுமன்ற தேர்தலையொட்டி, ஜாதி, மதம், மொழி வேறுபாடுகளை கூறி வாக்குகள் கேட்கக்கூடாது என, அரசியல் கட்சி பிரதிநிதிகள் ஆலோசனைக் கூட்டத்தில் சப்-கலெக்டர் ஆதர்ஷ் அறிவுறுத்தியுள்ளார். பாராளுமன்ற தேர்தலையொட்டி, காரைக்கால் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், நேற்று மாலை, அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், சப்-கலெக்டர் ஆதர்ஷ் பேசியது:  பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவித்தவுடன், தேர்தல் நடத்தை விதிமுறைகளும் அமலுக்கு வந்துவிட்டது. அதனால், தேர்தல் நடந்து முடியும்வரை, காரைக்காலில் ஜாதி, மதம், மொழி வேறுபாடுகளை வைத்து யாரும் ஓட்டு கேட்கக் கூடாது. எனக்குத்தான் ஓட்டு போட வேண்டும் என வாக்காளர்களை மிரட்டக்கூடாது. பொதுமக்கள் தாமாக முன்வந்து வாக்களிக்க வேண்டும். அவர்களை எக்காரணம் கொண்டும் நிர்பந்தமோ, கட்டாயமோ படுத்தகூடாது.  வாக்குச்சாவடியின் 100 மீட்டர் இடைவெளியில், யாரும் பிரசாரம் செய்யக் கூடாது. மேலும், பொதுக் கூட்டம் நடத்தினால் அதற்கான அனுமதியை காவல் துறையிடம் பெற வேண்டும். வழிபாட்டுத் தலங்களில் உள்ளேயும், வெளியேயும் பிரசாரம் செய்யக்கூடாது. பொதுக்கூட்டம், பிரசாரத்தை காலை 6 முதல் 10 மணி வரைதான் பயன்படுத்த வேண்டும். பொதுக்கூட்டத்திற்கு வரும்பொழுது ஆபத்தான பொருட்களை எடுத்து வரக்கூடாது.

மேலும் யாருடைய உருவபொம்மையையும் கொண்டுவரவோ, எரிக்கவோ கூடாது. மதுபான பொருட்களை வாக்காளர்களுக்கு வழங்கக் கூடாது. தேர்தல் முடியும் வரை தங்கள் வாகனங்களில் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் எடுத்துச் செல்லக் கூடாது. மீறி எடுத்துசென்று பறிமுதல் செய்யப்பட்டால் அதற்கான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். பிரசார மேடையில் மற்றவர்களை தாக்கி பேசுவதை தவிர்க்க வேண்டும். பிரசாரத்திற்கு கொடியை தவிர வேற எந்த பொருட்களையும் எடுத்துச் செல்லக்கூடாது. அரசு கட்டிடங்களில் போஸ்டர், நோட்டீஸ் ஒட்டவும், எழுதக்கூடாது. தனியார் இடம் என்றால் அந்த வீட்டின் உரிமையாளரிடம் அனுமதி பெற்று போஸ்டர் ஒட்ட எழுத வேண்டும். வேட்புமனு தாக்கலின் போது 100 மீட்டரில் 3 வண்டிகள் மட்டுமே அனுமதி அளிக்கப்படும் நாளை முதல் தேர்தல் துறை அனுமதி இல்லாமல் காரைக்காலில் போஸ்டர் ஒட்டவும், டிஜிட்டல் பேனர் வைக்கவோ கூடாது. மீறினால் தேர்தல் நடத்தை விதிமுறைப்படி நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தல் பார்வையாளர்கள் வரும்பொழுது உங்களுக்கான குறைகளைக் கூறி தீர்வு காண வேண்டும். என்றார். கூட்டத்தில், மாவட்ட எஸ்.எஸ்.பி ராகுல் ஆல்வா, துணை ஆட்சியர் பாஸ்கரன், எஸ்.பிகள் மாரிமுத்து, வீரவல்லவன் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள், அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: