பள்ளிக்கு அங்கீகாரம் வழங்கக் கோரி சேரன்மகாதேவி கல்வி அலுவலகத்தில் மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்

வீரவநல்லூர், மார்ச் 14:  சேரன்மகாதேவி கல்வி மாவட்ட அலுவலகத்தில் வி.கே.புரம் நாடார் யூனியன் நடுநிலைப்பள்ளி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வி.கே.புரத்தை அடுத்த முதலியார்பட்டியில் நாடார் யூனியன் நடுநிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 1 முதல் 5ம் வகுப்பு  அரசு நிதியுதவியுடன் நடத்தப்பட்டு வருகிறது. 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு  சுயநிதியில் நடத்தப்பட்டு வருகிறது. நடுநிலைப்பள்ளிக்கான தற்காலிக அங்கீகாரம், 2000ம் ஆண்டில் பெறப்பட்டது.  தற்போது அங்கீகாரம் முடிந்துவிட்ட நிலையில், அங்கீகாரத்தை நீட்டிக்கக் கோரி கடந்த ஏப்.2018ல் சேரன்மகாதேவி மாவட்ட கல்வி அலுவலகத்தில் பள்ளி நிர்வாகம் சார்பில் மனு கொடுக்கப்பட்டது. அப்போது சேரன்மகாதேவி மாவட்ட கல்வி அலுவலகம் நெல்லையில் செயல்பட்டு வந்தது. தற்போது சேரன்மகாதேவிக்கு அலுவலகம் மாற்றப்பட்டுள்ள நிலையில், அதிகாரிகள் கடந்த 6 மாதமாக அங்கீகாரத்தை நீட்டிக்காமல் காலம் தாழ்த்தியுள்ளனர்.

8ம் வகுப்பிற்கான இறுதித் தேர்வு நெருங்கி வரும் நிலையில் அதிகாரிகள் அங்கீகாரத்தை நீட்டிக்காததால் மாணவர்களின் நிலைமை கேள்விக்குறியானது.  இதையடுத்து நேற்று பள்ளிச் செயலர் பாஸ்கர் தலைமையில், சுமார் 35 மாணவர்கள் சேரன்மகாதேவி மாவட்ட கல்வி அலுவலக வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். போராட்டத்தின்போது அங்கீகாரத்தை நிறைவேற்றாமல் காலம் தாழ்த்திவரும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.  சுமார் 2 மணி நேரம் நடந்த இந்த போராட்டம் குறித்து தகவலறிந்த சேரன்மகாதேவி எஸ்ஐ வள்ளிநாயகம் மற்றும் போலீசார் விரைந்து வந்து பள்ளி செயலரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து மாவட்ட கல்வி அதிகாரி வந்தபிறகு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததின் பேரில் மாணவர்கள் கலைந்து சென்றனர்.

Related Stories: