கடையம் அருகே மலையடிவாரத்தில் ஆமை வேகத்தில் சாலை மற்றும் பாலப்பணிகள் காட்டுப்பகுதியில் சர்வீஸ் ரோடு போடப்பட்டதால் மக்கள் அச்சம்

கடையம், மார்ச் 14: கடையம் அருகே சாலை மற்றும் பாலப்பணிகள் ஆமை வேகத்தில் நடந்து வருவதாலும், காட்டுப்பகுதியில் சர்வீஸ் சாலை போடப்பட்டு உள்ளதாலும் கிராம மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

கடையம் அருகே சிவசைலம் ஊராட்சிக்குட்பட்டது பெத்தான்பிள்ளை குடியிருப்பு. இந்த கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்குள்ள மக்களின் பிரதான தொழில் விவசாயம் மற்றும் கால்நடைகளை வளர்த்தல் ஆகும். இந்த பகுதி மக்களின் போக்குவரத்து வசதிக்காக பங்களாகுடியிருப்பில் இருந்து பெத்தான்பிள்ளை குடியிருப்பு வரை சாலை அமைக்கப்பட்டது. இச்சாலை கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக கவனிப்பாரின்றி கிடந்ததால் சிதிலமடைந்து காணப்பட்டது. இதுகுறித்து தினகரனில் படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து கடந்த மே மாதம் நபார்டு திட்டத்தின் மூலம் சுமார் 4 கிமீ சாலையை புதுப்பிக்க ரூ.1 கோடியே 12 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. நிதி ஒதுக்கி 5 மாதத்திற்கு பிறகே அக்டோபரில் சாலை பணிகள் துவங்கின. முதற்கட்டமாக இச்சாலையில் உள்ள 8 கால்வாய் பாலங்களை இடித்துவிட்டு புதிதாக கட்டும் பணிகள் நடந்து வருகிறது.

இதன் காரணமாக இங்குள்ள மலையடிவாரத்தில் சர்வீஸ் சாலை போடப்பட்டுள்ளது. வனவிலங்குகள் நடமாட்டம் உள்ள பகுதியில் சர்வீஸ் சாலை அமைக்கப்பட்டுள்ளதால், அவ்வழியாக செல்லவே இப்பகுதி மக்கள் அச்சமடைந்து உள்ளனர். மேலும் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத சூழலும் காணப்படுவதாக இப்பகுதியை சேர்ந்த விவசாயி துரை கவலை தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், “சாலை மற்றும் பாலப்பணிகளால் கடந்த 5 மாதங்களாக அரசு பஸ், ஊருக்குள் வருவதில்லை. இதனால் இங்குள்ள பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள், பொதுமக்கள் போக்குவரத்து வசதியின்றி கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். நிதி ஒதுக்கி ஓராண்டாக போகிறது. ஆனால் இதுவரை பாலப்பணிகள் கூட முடியவில்லை” என்றார். எனவே மாவட்ட நிர்வாகம், பெத்தான்பிள்ளைகுடியிருப்பு சாலை மற்றும் பாலப்பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதே மலையடிவார மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Related Stories: