10ம் வகுப்பு தேர்வு இன்று துவக்கம் நெல்லை மாவட்டத்தில் 45 ஆயிரம் பேர் எழுதுகின்றனர்

நெல்லை, மார்ச் 14: தமிழகம் முழுவதும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று துவங்குகிறது. நெல்லை மாவட்டத்தில் தேர்வு பணியை ஆசிரியர்கள் சிறப்பாக மேற்கொள்ள வேண்டும் என ஆலோசனை கூட்டத்தில் பள்ளி கல்வித்துறை இணை இயக்குநர் ராதாகிருஷ்ணன் கூறினார். தமிழகத்தில் பிளஸ்1, பிளஸ்2 பொதுத்தேர்வுகள் தொடங்கி நடந்து வருகின்றன. இதனையடுத்து 10ம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு இன்று (14ம் தேதி) தொடங்கி வருகிற 29ம் தேதி வரை நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் குறித்த சிறப்பு ஆலோசனை கூட்டம், பாளை பெல் பள்ளியில் நடந்தது. இதில் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களின் தேர்வு பணிக்காக சிறப்பு பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள பள்ளிக்கல்வி இணை இயக்குநர் ராதாகிருஷ்ணன் பங்கேற்று பேசுகையில், நெல்லை மாவட்டத்தில் 24 ஆயிரத்து 315 மாணவிகளும், 21 ஆயிரத்து 71 மாணவர்களும் என மொத்தம் 45 ஆயிரத்து 386 பேர் 10ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதுகின்றனர். இத்தேர்வுக்காக நெல்லை, தென்காசி, சங்கரன்கோவில், வள்ளியூர், சேரன்மகாதேவி ஆகிய 5 கல்வி மாவட்டங்களில்  167 ேதர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதற்கு தேவையான ஆசிரிய பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 11 கஸ்டோடியன் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 35 வழித்தடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. தமிழ், ஆங்கிலப் பாடங்களுக்கு உரிய முதல் தாள் மற்றும் 2ம் தாள் தேர்வுகள் மட்டும் பிற்பகல் 2 மணி முதல் மாலை 4.45 மணி வரை நடைபெறும். கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களுக்கான தேர்வுகள் காலை 10 மணி முதல் பகல் 12.45 மணிவரை நடக்கிறது.

வினாத்தாள் கட்டு காப்பாளர்கள், வழித்தட அலுவலர்கள், துறை அலுவலர்கள், முதன்மைக் கண்காணிப்பாளர்கள், அறை கண்காணிப்பாளர்கள் மற்றும் பறக்கும்படையினர் தங்களுக்கு வழங்கப்பட்ட பணிகளை கடமை தவறாமல் சிறப்பாக மேற்கொள்ள வேண்டும். எந்த குறைபாடுகளும் புகார்களும் ஏற்படாத வகையில் பணியினை சீரானமுறையில் முன்கூட்டியே திட்டமிட்டு  செய்து முடிக்க வேண்டும் என்றார்.நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் பாலா, 5 கல்வி மாவட்ட அலுவலர்கள், நேர்முக உதவியாளர்கள் மற்றும் தேர்வுப்பணி மேற்கொள்ளும் ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். மத்திய சிறையில் தனி மையம்

10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு பாளை மத்திய சிறையில் சிறப்பு தனி தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கான விண்ணப்பித்துள்ள சிறைவாசிகள் 15 பேர் அங்குள்ள மையத்தில் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: