எஸ்ஐயை கண்டித்து பெண் தற்கொலை முயற்சி தம்பதி உள்பட 3 பேர் மீது வழக்கு: நிலஅபகரிப்பு புகாரில் நடவடிக்கை

ஜோலார்பேட்டை, மார்ச் 14: திருப்பத்தூர் அடுத்த பால்நாங்குப்பம் புதூர் கிராமத்தை சேர்ந்தவர் குமரேசன். இவர் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். இவரது மனைவி குமுதா(35). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

அதே பகுதியில் குமரேசனுக்கு சொந்தமான வீடு, நிலம் உள்ளது. இதனை குமரேசனின் தம்பியான அரசு பஸ் டிரைவர் கேசவன், அவரது மனைவி இந்திரா, இந்திராவின் தம்பி ரீகன் ஆகியோர் அபகரித்து வீடு கட்ட முயன்றதாக தெரிகிறது. இதுகுறித்து, கடந்த 3 ஆண்டுகளாக ஜோலார்பேட்டை போலீசில் குமுதா பலமுறை நில அபகரிப்பு புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லையாம். சில தினங்களுக்கு முன் ஜோலார்பேட்டை போலீசில் குமுதா மீண்டும் புகார் செய்தார். அதன்பேரில், வழக்குப்பதிவு செய்யுமாறு இன்ஸ்பெக்டர் வெங்கடாஜலம், சப்-இன்ஸ்பெக்டர் மூர்த்தியிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனால், மூர்த்தி வழக்குப்பதிவு செய்யாமல், குமுதாவை அலைக்கழித்தாராம். இதையடுத்து, குமுதா நேற்று சப்-இன்ஸ்பெக்டர் மூர்த்தி எதிர்தரப்பினருக்கு ஆதரவாக நடந்து கொள்வதாக கூறி அவரது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். இதைப்பார்த்த அப்பகுதியினர் குமுதாவை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், ஜோலார்பேட்டை போலீசார் கேசவன், இந்திரா, ரீகன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள 3 பேரையும் தேடி வருகின்றனர்.

Related Stories: