வெயிலின் தாக்கத்தால் இளநீர் விற்பனை அதிகரிப்பு

பொள்ளாச்சி, மார்ச் 12:  பொள்ளாச்சி  மற்றும் கிணத்துக்கடவு சுற்றுவட்டார கிராமங்களில், தென்னை விவசாயம்  அதிகம் உள்ளது.தென்னை உற்பத்தி பொருட்களான தேங்காய், கொப்பரை, மஞ்சி  மட்டுமின்றி இளநீரும் வெளியிடங்களுக்கு அதிகளவு அனுப்பி வைக்கப்படுகிறது.  சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள தென்னைகளில் உற்பத்தியாகும் பச்சைநிற  இளநீர் மற்றும் செவ்விளநீருக்கு, எப்போதும் மார்க்கெட்டில் நல்ல வரவேற்பு  உள்ளது.  ஒவ்வொரு ஆண்டும் கோடை காலம் வரும்போது, பொள்ளாச்சியிலிருந்து  வெளிமாவட்டங்களுக்கு அதிகளவில் இளநீர் விற்பனைக்காக அனுப்பி  வைக்கப்படுகிறது. பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் இளநீர்  விற்பனை சூடுபிடிக்கும். தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில், இந்த  ஆண்டு துவக்கத்திலிருந்தே வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது.

இதனால்,  தாகத்தை தனிக்கவும், உடலை குளிர்ச்சியூட்டவும் பலரும் இளநீரை விரும்பி  பருகுகின்றனர்.  இதில், கடந்த சில வருடங்களை விட, பொள்ளாச்சி  சுற்றுவட்டார பகுதியிலிருந்து  லாரி மற்றும் டெம்போக்கள் மூலம் வெளி  மாவட்டங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் இளநீர் குறிப்பிட்ட விலை  நிர்ணயம் செய்யப்பட்டு அனுப்பப்படுவது இந்த ஆண்டில் அதிகரித்துள்ளது.வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரிக்க துவங்கியதால் பச்சைஇளநீர்,  செவ்விளநீரின் தேவை அதிகமாக உள்ளது.  இளநீரின் விலை ஏற்றமாக  இருந்தாலும், வெளியூர் வியாபாரிகள் பொள்ளாச்சிக்கு நேரடியாக வந்து  கொள்முதல் செய்கின்றனர். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 30 லட்சம்  செவ்விளநீர், 26 லட்சம் பச்சைநிற இளநீர் வெளிமாவட்டம் மற்றும் வெளி  மாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.  வெளிமாவட்டம் மற்றும் வெளிமாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படும் இளநீர்  எண்ணிக்கை குறையாமல் இருக்க, அதன் மேல் மார்க்கிங் செய்து  அனுப்பப்படுகிறது. இதில், சுமார் 90 சதவீத செவ்விளநீர் கர்நாடகா, ஆந்திரா  உள்ளிட்ட வட மாநிலங்களுக்கும். சென்னை, மதுரை, திண்டுக்கல், விழுப்புரம்  உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும் அனுப்பப்படுகிறது.  

 இதுகுறித்து,  பொள்ளாச்சியை சேர்ந்த இளநீர் வியாபாரி சம்பத் கூறுகையில், “பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதியில் கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை  தொடர்ந்து பல மாதமாக பெய்ததால், தற்போது தென்னையில் இளநீர் உற்பத்தி  அதிகரித்துள்ளது. கடந்த சில வாரமாக, நாள் ஒன்றுக்கு சுமார் ஒரு லட்சம்  வரையிலும், விற்பனைக்காக பச்சை மற்றும் செவ்விளநீர் அனுப்பி வைக்கப்பட்டது.  தற்போது இந்த நிலை தொடர்ந்துள்ளது. கடந்த ஆண்டில் தோட்டத்தில் நேரடி  கொள்முதலாக ரூ. 20 மற்றும் ரூ.21க்கு விலை கொடுத்து வாங்கப்பட்டது.இந்த  ஆண்டில் இளநீர் உற்பத்தி அதிகமாக இருந்தாலும், வாகனங்களில் ஏற்றம் மற்றும்  இறக்கக்கூலி மற்றும் வரி உள்ளிட்டவை அதிகமாக இருப்பதால், இளநீரை குறைந்த  விலையில் கொடுத்தால் கட்டுபடியாவதில்லை. எனவே, இந்த ஆண்டும் தோட்டங்களில்  ஒரு இளநீர் ரூ.20க்கு கொள்முதல் செய்யப்படுகிறது’ என்றார்.

Related Stories: