திருப்பூரில் வீடுகளில் கொள்ளையடித்த பெண் உள்பட 7 பேர் கும்பல் கைது

திருப்பூர், மார்ச் 12:திருப்பூர் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள பூட்டியிருந்த பல்வேறு வீடுகளில் காரில் சென்று கொள்ளையடித்த பெண் உள்பட ஏழு பேர் கும்பலை போலீசார் கைது செய்து, 80 சவரன் நகை, கார் உட்பட, ரூ.25 லட்சம் மதிப்பிலான பொருட்களை பறிமுதல் செய்தனர்.திருப்பூர் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் வசிக்கும் பொது மக்கள் பெரும்பாலும் பின்னலாடை நிறுவனங்களில் வேலை பார்த்து வருகின்றனர். இவர்களில் பலர்,  பகலில் வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு செல்கின்றனர்.  கொள்ளை கும்பல்  உறவினர்கள் போல் விலை உயர்ந்த காரில் வந்து வீட்டின் முன் நிறுத்தி, கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பொருட்களை கொள்ளையடிப்பதை கடந்த இரு மாதங்களாக வழக்கமாக கொண்டிருந்தனர்.

இது குறித்து பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொது மக்கள் புகார் அளித்தனர். இதைதொடர்ந்து  கமிஷனர் சஞ்சய்குமார் உத்தரவின்படி, இரண்டு உதவி கமிஷனர்கள் தலைமையில், தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வந்தது. அப்பகுதியில் சந்தேகப்படும் நபர்களின் நடமாட்டம் குறித்து விசாரித்தனர். கண்காணிப்பு கேமராக்களில், போலீசாருக்கு சில தடயங்கள் கிடைத்தன.இதன்படி நடந்த விசாரணையில், கோவையை சேர்ந்த சதீஷ்குமார்(42), வேலுாரை சேர்ந்த சங்கர்( 36), திண்டுக்கல்லை சேர்ந்த வீரபாபு (21), திருப்பூரை சேர்ந்த ரமேஷ் (30), திருவாரூரை சேர்ந்த குருசக்தி(31), திருப்பூர் பலவஞ்சிபாளையத்தை சேர்ந்த வெங்கடேஷ் (30), அம்மாபாளையத்தை சேர்ந்த கீதா (29) ஆகியோர், டிப்-டாப் உடையணிந்து காரில் சென்று வீடுகளில் கொள்ளையடித்தது தெரிய வந்தது. குருசக்தி மீது தமிழகம் முழுவதும், 30க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. ஏழு பேர் கும்பலை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து, 80 பவுன் நகை, கார், இரண்டு பைக் என ரூ.25 லட்சம் மதிப்புள்ள பொருட்களை பறிமுதல் செய்தனர்.

Related Stories: