மாநகரில் தொடரும் குடிநீர் தட்டுப்பாடு லாரிகள் மூலம் விநியோகம்

திருப்பூர்,  மார்ச் 12: திருப்பூர் மாநகராட்சியின் பல பகுதியில் குடிநீர் விநியோகம்  பற்றாக்குறையாகவே உள்ளது. குடிநீர் பிரச்னை தலைதூக்காமல் இருப்பதற்காக பல  பகுதிகளில் லாரிகள் மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. திருப்பூர்  நகருக்கு, மேட்டுப்பாளையம், பவானி ஆற்றில் இருந்து முதல் குடிநீர் திட்டம்  மற்றும் இரண்டாம் குடிநீர் திட்டத்திலும், ஈரோடு மாவட்டம், பவானி அருகே  காவிரி ஆற்றிலிருந்து மூன்றாம் குடிநீர்த் திட்டத்திலும் குடிநீர்  விநியோகம் செய்யப்படுகிறது. திருப்பூர் மாநகராட்சியின் பல பகுதிகளில்  குறைந்தபட்சம் 5 தினங்களுக்கு ஒரு முறை குடிநீர் கிடைக்கிறது. அதே  சமயம் நல்லூர், வேலம்பாளையம் உள்ளிட்ட சில பகுதிகளில் 7 நாட்களுக்கு மேலான  நிலையிலும் குடிநீர் கிடைக்காமல் மக்கள் அவதிப்படுகின்றனர். அங்கீகாரமற்ற  குடியிருப்பு பகுதிகளில் குடிநீர் விநியோகக் குழாய் பதிக்கப்படாததால்  லாரிகள் மூலமாக குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இதற்கென கடந்த பல  ஆண்டுகளாக தனியார் குடிநீர் லாரிகள் ஒப்பந்த அடிப்படையில்  நியமிக்கப்பட்டுள்ளன.

கோல்டன் நகர், கே.வி.ஆர்.நகர், வெள்ளியங்காடு,  தட்டான்தோட்டம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மாநகராட்சி மற்றும் தனியார்  குடிநீர் லாரிகள் மூலமாக குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. ஆனாலும்,  மக்கள் குடிநீர் போதிய அளவு கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். மேலும் தனியார்  லாரிகள் மூலமாக விநியோகிக்கப்படும் குடிநீர் பல்வேறு தனியார்  நிறுவனங்களுக்கும், வர்த்தக நிறுவனங்களுக்கும் விற்கப்படுவதாகவும்  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில், கோடை காலம் துவங்க உள்ள  நிலையில், தண்ணீர் தட்டுப்பாடு மேலும் அதிகரிக்கும் நிலை உருவாகி உள்ளது.

Related Stories: