கோடை சீசனை முன்னிட்டு ரோஜா செடிகளுக்கு இயற்கை உரமிடும் பணி மும்முரம்

ஊட்டி, மார்ச் 12: கோடை சீசனை முன்னிட்டு ரோஜா பூங்காவில் கவாத்து செய்யப்பட்ட ரோஜா செடிகளுக்கு இயற்கை உரமிடும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.  கோடை சீசனுக்கு ஊட்டி வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் விதமாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. மே மாதம் முதல் வாரத்தில் ரோஜா பூங்காவில் ரோஜா கண்காட்சி நடக்கிறது. கடந்த மாதம் இப்பூங்காவில் உள்ள ரோஜா செடிகள் கவாத்து செய்யப்பட்ட நிலையில், தற்போது செடிகளை பராமரிக்கும் பணியில் பூங்கா ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக, ரோஜா செடிகளை பராமரிக்கும் பணியில் அதிக அக்கறை செலுத்தி வருகின்றனர். தற்போது நாள் தோறும் ரோஜா செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சும் பணிகள் நடந்து வருகிறது. மேலும், ரோஜா செடிகளுக்கு தற்போது இயற்கை உரமிடும் பணிகளில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இன்னும் 15 நாட்களில் ரோஜா செடிகள் நன்கு வளர்ந்து விடும் என அதிகாரிகள் ெதரிவித்தனர்.  மேலும் ஏப்ரல் முதல் வாரத்திற்கு மேல் மொட்டுக்கள் காணப்படும். இரண்டாவது வாரத்திற்கு மேல் பூங்கா முழுவதிலும் உள்ள ரோஜா செடிகளில் மலர்கள் பூத்துவிடும். இதை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்லலாம் என பூங்கா ஊழியர்கள் தெரிவித்தனர். இம்முறை பாராளுமன்ற தேர்தல் நடக்கும் நிலையில், ரோஜா கண்காட்சி நடத்தும் தேதி அறிவிக்கப்படாமல் உள்ளது. ஏப்ரல் 18ம் தேதியே தமிழகத்தில் வாக்குப்பதிவு முடியும் நிலையில், ரோஜா கண்காட்சி உட்பட அனைத்து கண்காட்சியும் நடத்த வாய்ப்புள்ளது. எனவே, இம்முறை ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் அனைத்து கண்காட்சிகளையும், நிகழ்ச்சிகளையும் கண்டு ரசித்து செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

Related Stories: