தேர்தல் விதிமுறைகளை வேட்பாளர்கள் முறையாக பின்பற்ற வேண்டும்

ஈரோடு, மார்ச் 12: தமிழகத்தில் ஏப்ரல் 10ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் முன்னேற்பாடு பணிகள் குறித்து நேற்று கலெக்டரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான கதிரவன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியது: ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த சட்டமன்ற தொகுதிகளில் 9 லட்சத்து 13 ஆயிரத்து 190 ஆண் வாக்காளர்களும், 9 லட்சத்து 49 ஆயிரத்து 517 பெண் வாக்காளர்களும், 73 திருநங்கைகள், 202 படைவீரர்கள் என 18 லட்சத்து 62 ஆயிரத்து 780 வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் வாக்களிக்கும் வகையில் 2 ஆயிரத்து 213 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்து.ஈரோடு நாடாளுமன்ற தொகுதியை பொருத்தவரை வரும் 19ம் தேதி முதல் 26ம்தேதி வரை வேட்புமனு தாக்கலும், 27ம்தேதி வேட்புமனு பரிசீலனை நடைபெறும். 29ம் தேதி வேட்புமனுக்கள் திரும்ப பெற்றுக் கொள்ளலாம். 29ம் தேதி மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். தமிழகத்தில் தேர்தல் ஏப்ரல் 18ம் தேதியும், ஓட்டு எண்ணிக்கை மே 23ம் தேதியும் நடைபெற உள்ளது.

ஈரோடு தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை மையம் ஈரோடு அருகே சித்தோடு ஐஆர்டிடி பொறியியல் கல்லூரியில் நடைபெற உள்ளது. ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் தலா 3 பறக்கும்படை குழுவும், மூன்று நிலை கண்காணிப்புக்குழு, மூன்று வீடியோ கண்காணிப்பு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. பறக்கும்படை குழு மற்றும் நிலை கண்காணிப்புக்குழுவில் ஒரு தாசில்தார் நிலை அதிகாரியும், ஒரு எஸ்எஸ்ஐயும், இரு கான்ஸ்டபிள்களும், ஒரு வீடியோகிராபர், டிரைவர் என செயல்படுவார்கள். வீடியோ கண்காணிப்புக்குழுவில் தாசில்தார் நிலை அதிகாரி, உதவியாளர், வீடியோகிராபர், டிரைவர் செயல்படுவார்கள். பறக்கும்படை குழுக்கள், வீடியோ கண்காணிப்புக்குழுக்கள், வீடியோ பார்வை குழுக்கள், கணக்கு குழுக்கள் உள்ளிட்ட பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுக்களில் இடம் பெற்றுள்ள அலுவலர்களுக்கு தேர்தல் காலங்களில் எவ்வாறு பணியாற்றுவது என்பது குறித்து அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த குழுவிற்கு பிரத்யேக எண்களுடன் செல்போன்  வழங்கப்பட்டுள்ளது. அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் மேற்கொள்ள வேண்டிய தேர்தல் நடத்தை விதிமுறைகள், பிரசாரம், ஊர்வலம், பொதுக்கூட்டம் நடத்துவது போன்ற தேர்தல் விதிமுறைகளை பின்பற்ற ஆலோசனைகள் வழங்கப்பட்டது.  அரசியல் கட்சிகள் தேர்தல் பிரசாரத்தின் போது தொலைக்காட்சி, வானொலி, நாளிதழ்களில் வெளியிடப்படும் விளம்பரங்களை முறையாக ஊடக சான்று மற்றும் கண்காணிப்பு குழுவிடம் ஒப்புதல் பெற்ற பின்னரே ஒளிபரப்ப வேண்டும். சமூக வலைதளங்களாக பேஸ்புக், டுவிட்டர், யுடியூப் மற்றும் வாட்ஸ்அப் போன்றவற்றிலும் தங்களது விளம்பரங்கள் தொடர்பாக சான்று பெற்ற பின்னரே ஒளிபரப்ப வேண்டும்.

ஒவ்வொரு குழுவிலும் தலா 8 மணி நேரம் என மூன்று வீடியோகிராபர்கள் என மாவட்ட அளவில் 186 வீடியோகிராபர்கள் பயன்படுத்தப்படவுள்ளது.இவர் பதிவு செய்யும் காட்சிகளை அன்றே தேர்தல் பிரிவுகளில் ஒப்படைப்பார்கள். பொதுமக்கள், வியாபாரிகள் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பணம் கொண்டு சென்றாலோ, சந்தேகப்படும் வகையில் அதிக பொருட்கள், பரிசு பொருட்கள் ஆகியவற்றை கொண்டு சென்றாலோ உரிய ஆவணங்கள் தேவை. வங்கிகள் மூலமாக ஆன்லைனில் பண பரிமாற்றம் செய்து கொள்வதே சிறந்ததாகும். மேலும் ஈரோடு மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் மீறப்பட்டது தொடர்பான புகார்களை 0424-2260211 என்ற தொலைபேசி எண்ணில்  தெரிவிக்கலாம்இவ்வாறு கதிரவன் கூறினார். இந்த பேட்டியின்போது மாவட்ட எஸ்.பி.சக்திகணேசன் உடனிருந்தார்.

Related Stories: