மாநகராட்சி பகுதியில் 3,169 தனிநபர் கழிப்பறை

ஈரோடு, மார்ச் 12:  ஈரோடு மாநகராட்சியில் தனி நபர் கழிப்பறை 3,169 கட்டப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.ஈரோடு மாநகராட்சியில் திறந்தவெளி கழிப்பறை இல்லாத நிலையை உருவாக்கும் வகையில் தனி நபர் கழிப்பறை திட்டம் செயல்படுத்தப்பட்டு நடைமுறையில் உள்ளது. இத்திட்டத்தின் மூலம் இதுவரை ஈரோடு மாநகராட்சியில் 3 ஆயிரத்து 169 தனி நபர் கழிப்பறை கட்டப்பட்டுள்ளது. ஈரோடு மாநகராட்சியில் மொத்தம் உள்ள 60 வார்டுகளில் 8 லட்சத்திற்கு மேற்பட்ட குடியிருப்புகளில் மக்கள் வசித்து வருகின்றனர். ஆனால், இதில் தனிநபர் கழிப்பறை இதுவரை சொற்ப அளவிலேயே கட்டப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘தனி நபர் கழிப்பறை கட்ட மத்திய அரசு  சார்பில் ரூ.4 ஆயிரம், மாநில அரசு   சார்பில் ரூ.2 ஆயிரம், மாநகராட்சி சார்பில் ரூ.2 ஆயிரம் என 8 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில், கழிப்பறை இல்லை என விண்ணப்பித்தால், அதிகாரிகள் ஆய்வு செய்து மானியத்துடன் கழிப்பறை கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். பட்டாவில் அவர்களது பெயர் இல்லை, போதிய ஆவணங்கள் இல்லை என்றாலும் மாநகராட்சி சார்பில் தனி நபர் கழிப்பறை கட்டி தர மானியம் தரப்படும். இதுவரை 3,169 கழிப்பறை கட்டப்பட்டுள்ளது. தனிநபர் கழிப்பறை திட்டம் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு கிடையாது. குடியிருப்புகளுக்கு மட்டுமே பொருந்தும். இவ்வாறு அதிகாரிகள் கூறுகின்றனர்.

Related Stories: