களைகட்டுது தேர்தல் திருவிழா குமரியில் சுவர்கள் பிடிப்பதில் கட்சிகள் போட்டா போட்டி

மார்த்தாண்டம், மார்ச் 12:  மத்தியில் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் 16வது மக்களவை பதவிக் காலம் வரும் ஜூன் 3ம் தேதியுடன் முடிகிறது. இதைத்தொடர்ந்து 17வது மக்களவை தேர்தலுக்கான தேதியை நேற்று முன்தினம் தேர்தல் ஆணையம் அறிவித்தது. தமிழகம், புதுவையில் உள்ள 40 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக ஏப்ரல் 18ம் தேதி வாக்குப்பதிவு நடக்க உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் வரும் 19ம் தேதி தொடங்குகிறது. நாடு முழுவதும் உள்ள 543 தொகுதிகளுக்கும் 7 கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டு, மே 23ம் தேதி ஓட்டுகள் எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவு அறிவிக்கப்பட உள்ளது. ஆந்திரா, சிக்கிம், அருணாச்சல பிரதேசம் மற்றும் ஒடிசா ஆகிய 4 மாநிலங்களின் சட்டப்பேரவைகளுக்கும், தமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டமன்ற தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கும் (இடைத்தேர்தல்) மக்களவை தேர்தலுடன் சேர்த்து தேர்தல் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால், நேற்று முன்தினம் முதலே தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. மேலும், சமூக வலைதளங்களில் அரசியல் கட்சிகள் விளம்பரம் செய்வதற்கும் முன் அனுமதி பெற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் இம்முறை விதிக்கப்பட்டுள்ளன. மக்களவை தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, ஏற்கனவே கொதித்து கொண்டிருந்த தேர்தல் ஜூரம் தற்போது மேலும் சூடு பிடிக்க தொடங்கி உள்ளது. 2வது முறையாக ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மும்முரமாக செயல்பட்டு வருகிறது. அதே நேரத்தில் மோடி ஆட்சியை அகற்ற காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், மாநில கட்சிகளுடன் இணைந்து வலுவான கூட்டணியை அமைத்து வருகின்றன.

தற்போது இரு தரப்பிலும் ஏறக்குறைய கூட்டணிகள் முடிவாகி, முழுவீச்சில் பிரசாரமும் நடந்து வருகிறது. பாஜ ஆட்சியில் மேற்கொண்ட பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி அமல் படுத்தியது, நாட்டில் நிலவும் வேலைவாய்ப்பின்மை, பெட்ரோல், டீசல் விலை உயர்வு, அமெரிக்க டாலருக்கு எதிராக வரலாறு காணாத சரிவை இந்திய ரூபாய் கண்டிருப்பது, கடும் விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து மக்கள் மத்தியில் காங்கிரஸ் எடுத்துரைத்து இம்முறை ஆட்சியை பிடிக்க முயலும். பாஜவும் தங்கள் ஆட்சியின் சாதனைகளை பட்டியலிட்டு தேர்தலை சந்திக்கும். மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பே தமிழகத்தில் திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டு விட்டது. தொகுதிகளை அடையாளம் காணும் வேலையில் அக்கட்சியினர் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் அதிமுக கூட்டணியில் தேமுதிகவும் சேர்ந்துள்ளது. தேமுதிகவுக்கு 4 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. தற்போது அதிமுக - பாஜ கூட்டணியில் அதிமுக 21, பாமக 7, பாஜ 5, ேதமுதிக 4, என்ஆர் காங்கிரஸ், புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி தலா ஓரிடத்திலும் போட்டியிட உள்ளன. அதுபோல திமுக - காங்கிரஸ் கூட்டணியில் திமுக 20, காங்கிரஸ் 10, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் தலா 2, மதிமுக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், கொங்கு நாடு மக்கள் கட்சி, ஐஜேகே தலா ஓரிடத்திலும் போட்டியிட உள்ளன. எந்தெந்த தொகுதிகளில் யார் யார் போட்டியிடப்போகிறார்கள் என்பது ஓரிரு நாளில்  முடிவாகிவிடும்.

தேர்தல் நடத்தை விதிகளின்படி நகர்ப்பகுதிகளில் சுவர் விளம்பரங்கள் செய்யக்கூடாது. இதற்கு இம்முறை விலக்கு அளிக்கப்படுமா என்பது தெரியவில்லை. ஆனால் கிராமங்களில் சம்பந்தப்பட்ட சுவரின் உரிமையாளரிடம் எழுத்துப்பூர்வமாக அனுமதிபெற்று சுவர் விளம்பரம் செய்யலாம் என்ற விதிமுறைகள் உள்ளன. இதனால் கட்சி தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் கிராமப்புறங்களில் ‘சுவர் பிடிக்கும்’ வேலையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

போட்டிப்போட்டுக்கொண்டு சுவர்களை பிடித்து வெள்ளையடித்து பிரதான கட்சிகளின் பிரதிநிதிகள், தங்கள் கட்சி சின்னங் களை வரைந்து பிரசார பணியை தொடங்கி விட்டனர். இந்த பணிகளில் திமுக மற்றும் அதிமுக கூட்டணியினர் கிராமங்களில் பல சுவர்களை அடையாளம் கண்டு அவற்றின் உரிமையாளர்களிடம் பேசிவருகின்றனர். மேலும், பல இடங்களில் சுவர்கள் புக் செய்யப்பட்டுவிட்டன. கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் கிராமப்புறங்களில் உள்ள பல இடங்களில் ஒரே சுவரில் 2 கட்சிகளும் பிரித்து ஆளுக்கு பாதி வெள்ளையடித்து விளம்பரங்கள் எழுத ‘பளீச்’ என தயாராக வைத்துள்ளனர். இதுபோல நகர்ப்பகுதிகளிலும் கட்சிகள் சில சுவர்களை பிடித்து போட்டுள்ளனர். ஆனால் இங்கு விளம்பரங்கள் எதுவும் செய்யப்படவில்லை. இந்த நிலையில் தொகுதிகள் ஒதுக்கீடு செய்த பின்னர் நகர பகுதிகளில் தேர்தலுக்கான அறிகுறியும் தெரியவரும். கிராமங்களில் இரு கூட்டணி  கட்சியினரும் போட்டி போட்டு சுவர் விளம்பரங்கள் செய்து வருவதால் கிராமங்களில் தேர்தல் திருவிழா களைகட்ட தொடங்கியுள்ளது.

Related Stories: