குழித்துறை பிஷப் மீது தாக்குதல்

மார்த்தாண்டம், மார்ச் 12: தக்கலை அருகே அப்பட்டுவிளை பகுதியில் கிறிஸ்தவ ஆலயம் உள்ளது. இது கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு 2 பங்காக பிரிக்கப்பட்டது. அதன்பின் 2 பங்குகளுக்கும் இடையே சொத்து மற்றும் பாதை தொடர்பான பிரச்னை இருந்து வருகிறது. இருதரப்பினருக்கும் இடையே உண்ணாமலைக்கடையில் உள்ள குழித்துறை மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் வைத்து பேச்சுவார்த்தை நடந்து வந்துள்ளது. இந்நிலையில் இப்பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் ஒரு பாதிரியார் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இக்குழு விசாரணை நடத்தி பிஷப்பிடம் தீர்வு குறித்து தெரிவித்தது. அதன்படி பிஷப் ஜெரோம்தாஸ் வறுவேல் தீர்வை பங்கு மக்களிடம் தெரிவித்தார். ஆனால் அதை ஒரு தரப்பினர் ஏற்றுக்கொள்ளவில்லை. இப்பிரச்னை தொடர்பாக கடந்த 3 நாட்களாக அப்பட்டுவிளையை சேர்ந்த ஒரு பங்கு மக்கள் 500க்கும் மேற்பட்டோர் ஆயர் இல்லத்தில் திரண்டு உள்ளிருப்பு போராட்டம் நடத்த முயற்சி செய்து வந்தனர். ஆனால் போலீசார் அனுமதிக்கவில்லை.

இந்நிலையில் நேற்று முன்தினம் பிஷப் ஜெரோம்தாஸ் வறுவேல் ஆயர் இல்லம் வந்தபோது அங்கு காத்திருந்த சம்பந்தப்பட்ட பங்கு நிர்வாகிகள் பெண்கள் உள்பட 50 பேர் திடீரென பிஷப்பை தடுத்து நிறுத்தி வாக்குவாதம் செய்து தாக்கியுள்ளனர். அவர்களை தடுத்த காவலாளி மனோகரனையும் தாக்கினர். இதில் காயமடைந்த பிஷப் ஜெரோம்தாஸ் வறுவேல் மற்றும் மனோகரன் ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சம்பவம் குறித்து காவலாளி மனோகரன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் ஒரு தரப்பை சேர்ந்த ஜோசப் ராஜ், ஞானதாஸ்(43), பிரான்சிஸ்(60), ஆன்றோ(36), பரஞ்சோதி(70), வர்க்கீஸ்(30), புனிதா(35) உள்பட 50 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த நிலையில் அப்பட்டுவிளையை சேர்ந்த ஆன்றனி(41), ஜெயசீலன்(63) ஆகிய இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். இதனிடையே ஆயர் இல்லத்தில் இதுதொடர்பாக நேற்று ஆலோசனை நடந்தது. இதில் பிஷப்பை தாக்கியவர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: