கருங்கல் அருகே பரபரப்பு ரேஷன் அரிசி கடத்திய சொகுசு காரை பைக்கில் துரத்தி பிடித்த போலீஸ்

கருங்கல், மார்ச் 12: கருங்கல் அருகே ஒன்றரை டன் ரேஷன் அரிசியுடன் கடத்தல் காரை தனிப்படை போலீஸ் பைக்கில் துரத்தி சென்று மடக்கி பிடித்தார். மார்த்தாண்டம் பகுதியை சேர்ந்தவர் ஸ்டாலின் (38). இவர் சப் இன்ஸ்பெக்டர் ஜாண்போஸ்கோ தலைமையிலான குளச்சல் காவல் சரக தனிப்படையில் போலீசாக உள்ளார். இவர் நேற்று மதியம் கருங்கலில் இருந்து மார்த்தாண்டம் நோக்கி பைக்கில் வந்து கொண்டிருந்தார். முள்ளங்கினாவிளை வரும் போது இவரது பைக்கை முந்திச்சென்ற சொகுசு காரின் பின்பகுதியில் ஏதோ மூடைகள் அடுக்கப்பட்டு அதை துணியால் மூடியிருந்ததை கவனித்தார். சந்தேகமடைந்த ஸ்டாலின் பைக்கை வேகமாக ஓட்டிச்சென்று டிரைவரிடம் காரை வழிமறித்து நிறுத்துமாறு கூறினார். அப்போது காரை நிறுத்துவது போல் பாவனை சென்ற டிரைவர் திடீரென அதிவேகத்துடன் ஓட்டிச்சென்றார். இதையடுத்து ஸ்டாலின் பைக்கில் பின்தொடர்ந்து காரை துரத்தினார். இதை பார்த்த டிரைவர் காரை நட்டாலம், இடவிளாகத்தில் இருந்து குறுக்குபாதை வழியாக திருப்பி கொல்லஞ்சி - இலவுவிளை சாலையில் சென்றார்.

 நெல்வேலி பகுதியில் செல்லும் போது நான்கு வழிச்சாலை பணிக்காக அப்பகுதியில் சாலை முழுமையாக துண்டிக்கப்பட்டிருந்தது. இதனால் காரை ஓட்டிச்ெசல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து காரின் வேகத்தை குறைத்து காரில் இருந்த டிரைவர் மற்றும் ஒருவர் வெளியே குதித்து தப்பினர். மேடான பகுதி என்பதால் கார் பின்நோக்கி நகர்ந்து ெநல்வேலி காவுமூலை கோயில் காம்பவுண்ட் சுவர் மற்றும் அப்பகுதியில் உள்ள நெடுஞ்சாலைத்துறையின் எல்லைக்கல்லில் மோதி நின்றது. சம்பவம் நடந்த போது அதிர்ஷ்டவசமாக அப்பகுதியில் வேறு வாகனங்களோ, ஆட்களோ வராததால் இழப்பு ஏற்படவில்லை. ஸ்டாலின் காரை சோதனையிட்டதில், அதில் சிறுசிறு மூடைகளில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்ததை பார்த்தார். இதையடுத்து ஸ்டாலின் உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு பறக்கும் படைக்கு தகவல் தெரிவித்தார். ஆர்ஐ ரதன்குமார் தலைமையில் வந்த பறக்கும் படையினர் காருடன் அதிலிருந்த சுமார் ஒன்றரை டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். அரிசி காப்புக்காடு அரசு கிட்டங்கியிலும், கார் தாசில்தார் அலுவலகத்திலும் ஒப்படைக்கப்பட்டது. சினிமா காட்சிகளை மிஞ்சிய இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: