நாகர்கோவிலில் நாளை ராகுல்காந்தி பங்கேற்கும் பொதுக்கூட்டம்

நாகர்கோவில், மார்ச் 12: நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பங்கேற்கும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நாளை (13ம் தேதி) நடக்கிறது. இதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கின்றனர். தமிழகம், புதுவைக்கு வரும் ஏப்ரல் 18ம் தேதி மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான மனுத்தாக்கல் வரும் மார்ச் 19ம் தேதி தொடங்க உள்ளது. தேர்தலையொட்டி அரசியல் கட்சிகள் தொகுதி பங்கீடு, வேட்பாளர் நேர்காணல் போன்றவற்றில் தீவிரம் காட்டி வருகின்றன. இந்தநிலையில் பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கன்னியாகுமரி, சென்னை உள்ளிட்ட இடங்களில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். திமுக கூட்டணியில் திமுக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், கொமதேக உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. கூட்டணி அமைந்த பின்னர் முதல் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நாகர்கோவிலில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி மைதானத்தில் நடைபெற உள்ளது. இதற்காக அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி, நாளை (13ம் தேதி) குமரி மாவட்டம் வருகிறார். டெல்லியில் இருந்து விமானம் மூலம் திருவனந்தபுரம் வரும் அவர் அங்கிருந்து ஹெலிகாப்டரில் மதியம் 2 மணிக்கு நாகர்கோவில் வந்து சேருகிறார். பொதுக்கூட்ட நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு  திருவனந்தபுரம் செல்லும் அவர் 14ம் தேதி கேரளாவில் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.

தமிழகத்தில் திமுக காங்கிரஸ் கூட்டணி தேர்தல் பிரசாரத்தை தொடக்கி வைத்து நாகர்கோவில்  பொதுக்கூட்டத்தில் ராகுல்காந்தி பேசுகிறார். இந்த கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், வைகோ, தொல்.திருமாவளவன், கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைவர்கள் உட்பட கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் அனைவரும் பங்கேற்க இருக்கின்றனர். இதனையொட்டி டெல்லியில் இருந்து சிறப்பு பாதுகாப்பு படை (எஸ்பிஜி) அதிகாரிகள் குழுவினர் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி மைதானத்தில் முகாமிட்டு சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுக்கூட்டத்திற்கு தலைவர்கள் வர வேண்டிய பாதை, ராகுல் காந்தி வரவேண்டிய பாதை, பொதுமக்கள், தொண்டர்கள் வர வேண்டிய வழிகள், ஹெலிகாப்டர் இறங்கும் இடம் போன்ற பல்வேறு அம்சங்கள் தொடர்பாக அவர்கள் கட்சியினருக்கு விளக்கினர். இதனையொட்டி நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி மைதானம் நேற்று முதல் போலீசாரின் முழு கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. தொடர்ந்து பந்தல் அமைத்தல், ஹேலிபேடு அமைத்தல், மேடைக்கு ராகுல்காந்தி வருகை தருவதற்காக பிரத்யேக சாலை அமைத்தல் போன்ற பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்தநிலையில் நேற்று காங்கிரஸ் அகில இந்திய செயலாளர் சஞ்சய்தத், செயல் தலைவர்கள் வசந்தகுமார் எம்எல்ஏ, மயூரா ஜெயக்குமார், ஜெயக்குமார் மற்றும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் ராபர்ட்புரூஸ், அசோகன் சாலமன் உட்பட தலைவர்கள் பொதுக்கூட்ட ஏற்பாடுகளை பார்வையிட்டனர்.

பின்னர் வசந்தகுமார் எம்.எல்.ஏ கூறுகையில், ‘நாகர்கோவில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் ராகுல்காந்தி, மு.க.ஸ்டாலின் உட்பட 11 கூட்டணி கட்சிகளை சேர்ந்தவர்கள்  கலந்து கொள்கின்றனர். தொண்டர்கள் மதியம் 2 மணிக்குள் கூட்ட அரங்கிற்குள் வர ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. ஒரு லட்சம் தொண்டர்கள் வரை திரளுவார்கள் என்ற அடிப்படையில் அதற்கு ஏற்ற வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றது’ என்றார்.

பாதுகாப்புக்கு 2,000 போலீஸ் ராகுல்காந்தி  வருகையையொட்டி நாகர்கோவிலில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்  செய்யப்படுகின்றன. ராகுல்காந்தி பங்கேற்கும் மைதானத்தில் சுமார் 2 ஆயிரம்  போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். வெடிகுண்டு நிபுணர்கள்  கல்லூரி மைதானம் மற்றும் கட்டிடங்கள், சுற்றி உள்ள கட்டிடங்களில் சோதனை  நடத்தி வருகின்றனர். ராகுல்காந்தி ஹெலிகாப்டர் இறங்குவதற்காக கல்லூரி  மைதானத்தில் தற்காலிக ஹெலிபேடு அமைக்கப்படுகிறது. அங்கும் போலீசார்  நிறுத்தப்பட்டு உள்ளனர். ராகுல்காந்தி ஹெலிகாப்டரில் இறங்கி, கார் மூலம்  பொதுக்கூட்ட மேடைக்கு வருகிறார். பொதுக்கூட்டம் நடைபெறும் மைதானம்  முழுவதும் போலீசாரின் முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

Related Stories: