குமரியில் காவல் நிலையம் வாரியாக ரவுடிகள் பட்டியல் தயாரிப்பு

நாகர்கோவில், மார்ச் 12: நாடாளுமன்ற தேர்தல் மொத்தம் 7 கட்டங்களாக நடைபெற உள்ளன. தமிழகத்தில் ஏப்ரல் 18ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. குமரி மாவட்டத்தில் 48 இடங்களில் அமைய உள்ள 208 வாக்குச்சாவடிகள் பதற்றமான வாக்குச்சாவடிகளாக கண்டறியப்பட்டு உள்ளன. பதற்றமான வாக்கு சாவடிகளில் துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். தேர்தலை அமைதியாக நடத்தும் வகையில் தேவையான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை எஸ்.பி.நாத் தலைமையில் போலீசார் மேற்கொண்டு வருகிறார்கள்.குறிப்பாக ரவுடிகளை முன்னெச்சரிக்கையாக கைது  செய்யும் நடவடிக்கைகளை போலீசார் தொடங்கி உள்ளனர். அடிதடி மற்றும் குற்ற வழக்குகளில் தொடர்பு உடையவர்களிடம் பிரிவு 109, 110ன் கீழ் வழக்கு பதிவு செய்து, அவர்களை ஆர்.டி.ஓ. முன் ஆஜர்படுத்தி நன்னடத்தை சான்றிதழ் வழங்கும் நடவடிக்கையிலும் போலீசார் இறங்கி உள்ளனர். நன்னடத்தை சான்றிதழ் எழுதி கொடுத்தவர்கள் 1 வருடத்துக்கு எந்த வித  குற்ற செயல்களிலும் ஈடுபட கூடாது. இதை மீறி குற்ற செயல்களில் ஈடுபட்டால் 1 வருடம் வரை சிறை தண்டனை விதிக்கப்படும். தற்போது இதற்கான நடவடிக்கைகள் அந்தந்த காவல் நிலையங்களில்  தொடங்கப்பட்டுள்ளன.

காவல் நிலையங்களில் தயாரிக்கப்பட்டுள்ள ரவுடிகள் பட்டியல் படி, அதில் உள்ளவர்களை அடையாளம் கண்டு அவர்களின் நடவடிக்கைகளை கண்காணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே காவல் நிலையம் வாரியாக தயாரிக்கப்பட்டுள்ள ரவுடிகள் பட்டியலில் 1200 பேர் வரை இடம் பெற்றுள்ளனர். இவர்களை ஆக்டிவ் ரவுடிகள், ஆக்டிவ் இல்லாத ரவுடிகள் என தரம் பிரித்து உள்ளனர். இதில் ஆக்டிவ் ரவுடிகள் பட்டியலில் உள்ளவர்களிடம் நன்னடத்தை சான்றிதழ் எழுதி வாங்கும் நடவடிக்கைகள் தொடங்கி உள்ளன. குமரி மாவட்டத்தில் சமீப காலமாக ரவுடிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கொலை, கொலை முயற்சி வழக்குகள் அதிகமாகி உள்ளன. ரவுடிகள் பட்டியலில் இல்லாதவர்களும் குற்ற செயல்களில் சிக்கி உள்ளனர். எனவே ரவுடிகள் பட்டியலை புதுப்பித்து அதற்கேற்றவாறு சமூக விரோத செயல்களில் ஈடுபடுகிறவர்களை கண்டறிந்து கைது நடவடிக்கை மேற்கொள்ளும்படி எஸ்பி. உத்தரவிட்டுள்ளார். மேலும் காவல் நிலையம் வாரியாகவும் தனித்தனி பறக்கும் படைகள் அமைக்கப்பட உள்ளன. இவர்கள் அந்தந்த பகுதிகளில் வாகன சோதனைகள் நடத்தி பணப்பட்டுவாடா உள்ளிட்டவற்றை தடுக்கவும், தேர்தல் தொடர்பான மோதல்களை தவிர்க்கும் வகையிலும் கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

Related Stories: