தேர்தல் நடத்தை விதிகள் அமல் குமரி கலெக்டர் அலுவலகத்திற்கு மனுக்களுடன் திரண்ட மக்கள்

நாகர்கோவில், மார்ச் 12:  குமரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனுக்களுடன் திரண்ட மக்கள் மனுக்களை பெட்டியில் போட்டுவிட்டு திரும்பி சென்றனர். குமரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் திங்கள்கிழமை தோறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடப்பது வழக்கம். இந்த கூட்டத்தில் மாற்று திறனாளிகள் மற்றும் பொதுமக்கள், விவசாயிகள் என்று சுமார் 500க்கும் மேற்பட்டோர் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் அளிப்பது வழக்கம். இந்தநிலையில் பாராளுமன்ற தேர்தல் அறிவிப்பு, தேர்தல் நடத்தை விதிகள் நேற்று முன்தினம் முதல் அமலுக்கு வந்தது. அதைத் தொடர்ந்து வழக்கமாக நடைபெற வேண்டிய மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறவில்லை. நேற்று காலை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு கொடுக்க வந்த பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர். தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததால் மனுக்கள் அளிக்க இயலாது என்பது தொடர்பாக அறிவிப்புகள் கலெக்டர் அலுவலகத்தில் ஒட்டப்பட்டிருந்தன.

பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை பதிவு செய்ய புகார் பெட்டி வடிவில் ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர். இதனையடுத்து அந்த பகுதியில் புகார்களை போடுவதற்கான பெட்டி ஒன்று வைக்கப்பட்டது. இது தொடர்பாக மாவட்ட ஐக்கிய கம்யூனிஸ்ட் செயலாளர் பொன்னுலிங்க ஐயன் கூறுகையில், ‘மனுக்கள் அளிக்க வரும் பொதுமக்கள், மனுக்களை கலெக்டரிடம் சேர்க்கும் விதமாக அதனை போடுவதற்கு வைக்கப்பட்டுள்ள பெட்டி மிக சிறியதாக உள்ளது. இதனால் அதில் மனுக்களை போடுவதில் சிரமம் ஏற்படுகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் இதற்கு தகுந்த மாற்று ஏற்பாடுகளை செய்ய வேண்டும். மனுக்களை பெற்றுக்கொள்வதற்காக பெரிய அளவில் பெட்டி கலெக்டர் அலுவலகத்தில் வைக்க வேண்டும். இது தொடர்பான விபரங்களையும் எழுதி அறிவிப்பாக வைக்க வேண்டும்’ என்றார்

Related Stories: