மாசிக்கொடை 10ம் நாள் விழா மண்டைக்காடு கோயிலில் இன்று நள்ளிரவு ஒடுக்கு பூஜை

குளச்சல், மார்ச் 12: பெண்களின் சபரிமலை என்றழைக்கப்படும் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் மாசி கொடைவிழா கடந்த 3ம் தேதி காலை திருக்கொடியேற்றத்துடன் தொடங்கி பல்வேறு நிகழ்ச்சிகளுடன் நடந்து வருகிறது. ஹைந்தவ சேவா சங்கம் சார்பில் சமய மாநாடு திடலில் தினமும் ஆன்மிக பேருரை நிகழ்ச்சிகள், பக்தி பஜனை மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன. விழாவில் 3ம் நாள் முதல் காலை மற்றும் இரவு 9.30 மணிக்கு அம்மன் வெள்ளிப்பல்லக்கில் எழுந்தருளி உலா வரும் நிகழ்ச்சி நடந்து வருகிறது. மேலும் கேரள மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் மண்டைக்காட்டில் குவிந்து பொங்கலிட்டு வழிபட்டு வருகின்றனர். கேரளாவில் இருந்து பெண் பக்தர்கள் இருமுடி கட்டி வந்து அம்மனை வழிபடுகின்றனர். 6ம் நாள் நள்ளிரவு முக்கிய வழிபாடான மஹாபூஜை என்னும் வலியபடுக்கை பூஜை நடந்தது.

விழாவின் 9ம் நாளான நேற்று இரவு மற்றொரு முக்கிய வழிபாடான பெரிய சக்கர தீவெட்டி பவனியுடன் அம்மன் வெள்ளிப்பல்லக்கில் உலாவரும் நிகழ்ச்சி நடந்தது. 10ம் நாளான இன்று அதிகாலை 2 மணிக்கு மண்டைக்காடு சாஸ்தான் கோயிலில் இருந்து யானை மீது களபம், சந்தனக்குடம் பவனி திருக்கோயில் வந்தடைகிறது. 3.30 மணிக்கு அம்மன் வெள்ளிப்பல்லக்கில் எழுந்தருளல், 4.30 முதல் 5 மணி வரை அடியந்திர பூஜை, குத்தியோட்டம், மாலை 6.30 மணிக்கு சாயரட்சை பூஜை, இரவு 8 மணிக்கு ஹரிகதை மற்றும் இன்னிசை விருந்து, 9.30க்கு அம்மன் வெள்ளிப்பல்லக்கில் எழுந்தருளல், நள்ளிரவு 12 மணிக்கு ஒடுக்கு பூஜை படையல் திருக்கோயிலுக்கு கொண்டு வருதல், 1 மணிக்குள் ஒடுக்கு பூஜை நடக்கிறது.

Related Stories: