திருவண்ணாமலை மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமீறல்களை கண்காணிக்க 24 பறக்கும் படைகள் மற்றும் 24 நிலை கண்காணிப்புக் குழுக்கள் அமைப்பு: கலெக்டர் தகவல்

திருவண்ணாமலை, மார்ச் 12: திருவண்ணாமலை மாவட்டத்தில், தேர்தல் நடத்தை விதிமீறல்களை கண்காணிக்க 24 பறக்கும் படைகள் மற்றும் 24 நிலை கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது என கலெக்டர் தெரிவித்தார். மக்களவைத் தேர்தல் தொடர்பாக, அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் ஆலோசனைக் கூட்டம், திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ேக.எஸ்.கந்தசாமி தலைமையில் நேற்று நடந்தது. அதில், எஸ்பி சிபிசக்ரவர்த்தி, டிஆர்ஓ ரத்தினசாமி, உதவி கலெக்டர்(பயிற்சி) மு.பிரதாப், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜெயசுதா, டிஎஸ்பிக்கள் அண்ணாதுரை, குமார், மாவட்ட தேர்தல் பிரிவு தாசில்தார் முருகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மக்களவைத் தேர்தலில், அரசியல் கட்சியினர் பின்பற்ற வேண்டிய நடத்தை விதிமுறைகள் குறித்து, கலெக்டர் விளக்கினார். மேலும், அரசியல் கட்சியினர் எழுதியுள்ள சுவர் விளம்பரங்களை, தாங்களாகவே முன்வந்து, அழிக்க வேண்டும் என தெரிவித்தார். தொடர்ந்து, கலெக்டர் கூறியதாவது: திருவண்ணாமலை மாவட்டத்தில், திருவண்ணாமலை மற்றும் ஆரணி மக்களவைத் தொகுதிகள் உள்ளன. திருவண்ணாமலை ெதாகுதிக்கு கலெக்டர், ஆரணி தொகுதிக்கு டிஆர்ஓ ஆகியோர் தேர்தல் நடத்தும் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளனர். கலெக்டர் அலுவலகத்தில், இரண்டு தொகுதிகளுக்கும் வேட்புமனுக்கள் பெறப்படும்.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் நேற்று முன்தினம் முதல் அமலுக்கு வந்துவிட்டது. எனவே, தேர்தல் விதிமீறல்களை கண்காணிக்க, 24 பறக்கும் படைகள், 24 நிலை கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு குழுவிலும் 7 பேர் இடம் பெற்றுள்ளனர். 8 மணி நேரம் என்ற அடிப்படையில் 3 சுழற்சிகளாக 24 மணி நேரமும் கண்காணிப்பு பணி நடக்கும். இந்த தேர்தலில் 5,817 கட்டுப்பாடு இயந்திரம், 3,167 வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் யாருக்கு வாக்களித்தோம் என்பதை தெரிந்துகொள்ளும் 3,211 விவிபேட் இயந்திரம் பயன்படுத்தப்படும். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வரும் 16ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். அவை, முறையாக பரிசீலனை செய்யப்பட்டு, துணை வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படும். திருவண்ணாமலை மாவட்டத்தில், 17,865 மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் உள்ளனர். அவர்களுடைய பெயர்கள், வாக்காளர் பட்டியலில் தனித்து காண்பிக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல், 580 சாதுக்கள், 94 திருநங்கைகள் பெயர்களும் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.

வாக்குச்சாவடி அலுவலர்களாக பணியாற்ற 11,500 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு, முறையாக பயிற்சி அளிக்கப்படும். தேர்தல் தொடர்பான சந்தேகங்களை, 1950 என்ற கட்டணமில்லா தொலைபேசி மூலம் தெரிந்துகொள்ளலாம். மேலும், பிரத்யேக மொபைல் செயலி மூலம், பொதுமக்கள் தங்கள் பகுதியில் நடைபெறும் விதிமீறல்களை தெரிவிக்கலாம். ராணுவத்தில் பணிபுரியும் வீரர்கள் 4,762 பேருக்கு, ஆன்லைன் மூலம் வாக்குச்சீட்டு படிவங்கள் அனுப்பி வைக்கப்படும். அதனை, அவர்கள் பூர்த்தி செய்து, தபால் மூலம் அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். அதைத்தொடர்ந்து, பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்பு குழுவில் இடம் பெற்றுள்ளவர்களுக்கு, விதிமுறைகள் குறித்து விளக்கினார். பின்னர், பறக்கும் படை வாகனங்களை தொடங்கி வைத்தார்.

Related Stories: