செங்கம் அருகே காப்புக்காட்டில் வனவிலங்குகளை வேட்டையாட முயன்ற 3 பேர் கைது நாட்டுத்துப்பாக்கி, 2 பைக் பறிமுதல்

செங்கம், மார்ச் 12: செங்கம் அருகே காப்புக்காட்டில் வனவிலங்குகளை வேட்டையாட முயன்ற 3 பேரை வனத்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து நாட்டுத்துப்பாக்கி, 2 பைக்குகளை பறிமுதல் செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வனச்சரக அலுவலர் ராமநாதன் தலைமையில் வன பாதுகாவலர்கள் பாலச்சந்திரன், ஏழுமலை, ஜெயவேலு, வேலு, மோகன் ஆகியோர் நேற்று மதியம், தென்மலை காப்புக்காடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக 2 பைக்குகளில் வந்த 5 பேரை சந்தேகத்தின்பேரில் தடுத்து நிறுத்தினர். அதிகாரிகளை பார்த்ததும் அந்த மர்ம ஆசாமிகள் தப்பிேயாடினர். விரட்டிச்சென்ற வனத்துறையினர் 3 பேரை மட்டும் மடக்கி பிடித்தனர்.

விசாரணையில், அவர்கள் மேல்தட்டியாப்பட்டு கிராமத்தை சேர்ந்த கணபதி(27), கோபால்(42), புதுப்பட்டு சீனிவாசன்(22) என்பதும், காப்புக்காட்டில் வனவிலங்குகளை வேட்டையாட சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து, அவர்களை கைது செய்த வனத்துறையினர் அவர்களிடம் இருந்து நாட்டுத்துப்பாக்கி, 2 பைக்குகளை பறிமுதல் செய்தனர். மேலும், தப்பியோடிய தனகோட்டி, அருள் ஆகிய 2 பேரை தேடிவருகின்றனர்.

Related Stories: