தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் மீதான கிரிமினல் வழக்கு விபரங்களை விளம்பரமாக 3 முறை வெளியிட வேண்டும் தேர்தல் ஆணையம் உத்தரவு

திருவண்ணாமலை, மார்ச் 12: மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், தங்கள் மீதுள்ள கிரிமினல் வழக்கு மற்றும் தண்டனை விபரங்களை செய்தித்தாளில் 3 முறை விளம்பரம் செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மிகப்பெரும் ஜனநாயக நாடான இந்தியாவில் நடைபெறும் தேர்தலை, உலக நாடுகள் எப்போதும் உற்றுப்பார்க்கும் நிலை உள்ளது. ஆனாலும், கிரிமினல் வழக்குகளில் தொடர்புடைய, நீதிமன்றங்களால் தண்டிக்கப்பட்ட, குற்றவாளிகள் என தீர்ப்பு அளிக்கப்பட்ட நபர்கள், தேர்தலில் களம் இறங்குவது ஒவ்வொரு தேர்தலிலும் அதிகரித்து வருகிறது. ஆனால், வேட்பாளர்களின் முழுமையான பின்னணியை மக்கள் முழுமையாக தெரிந்துகொள்ள முடிவதில்லை. வேட்பாளர்கள் தாக்கல் செய்யும் வேட்புமனுக்களில், நிலுவை வழக்கு விபரம், தண்டனை பெற்ற விபரம் குறிப்பிடப்படுகிறது. ஆனாலும், அந்த விபரங்கள் இணையத்திலும், சம்பந்தப்பட்ட அலுவலக தகவல் பலகையிலும் மட்டுமே வெளியிடப்படுகின்றன.

எனவே, இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், தங்கள் மீது நிலுவையில் உள்ள கிரிமினல் குற்ற வழக்கு விபரம் மற்றும் தண்டனை பெற்ற விபரம் ஏதேனும் இருந்தால், அதை தாங்களாகவே செய்தித்தாள் மற்றும் ஊடகங்களில் விளம்பரமாக வெளியிட வேண்டும் என தேர்தல் ஆணையம் புதிய கட்டுப்பாடு விதித்திருக்கிறது. மேலும், வேட்புமனு தாக்கல் முடிந்ததில் இருந்து, வாக்குப்பதிவு நடைெபறும் 2 நாட்களுக்கு முன்புவரையுள்ள கால அவகாசத்தில், அடுத்தடுத்து 3 முறை இந்த விளம்பரம் வெளியாக வேண்டும். அந்த விபரத்தை, சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும். ஒருவேளை, வழக்கு விபரம் மற்றும் தண்டனை விபரத்தை வேட்பாளர் மறைத்து, விளம்பரம் செய்ய தவறினால், அந்த வேட்பாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது. மேலும், வேட்பு மனுதாக்கல் செய்யும் போது, இது தொடர்பான விபர கையேடுகளை, வேட்பாளர்களிடம் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: