அரக்கோணம் அருகே லாரியுடன் எரித்து கொல்லப்பட்டவரை அடையாளம் காண டிஎன்ஏ சோதனை டிஎஸ்பி தலைமையில் 2 தனிப்படைகள் தீவிர விசாரணை

அரக்கோணம், மார்ச் 12: அரக்கோணம் அருகே கன்டெய்னர் லாரியுடன் எரித்து கொலை செய்யப்பட்டவர் லாரி டிரைவரா? என்று கண்டறிய டிஎன்ஏ சோதனை செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர். மேலும் இந்த வழக்கு தொடர்பாக டிஎஸ்பி தலைமையில் 2 தனிப்படைகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றன. வேலூர் மாவட்டம், அரக்கோணம் அடுத்த தக்கோலம்- பேரம்பாக்கம் சாலையில் தனியாருக்கு சொந்தமான பெட்ரோல் பங்க் அருகே நிறுத்தப்பட்டிருந்த கன்டெய்னர் லாரி நேற்று முன்தினம் அதிகாலையில் தீப்பிடித்து எரிந்தது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் தக்கோலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தனர். அப்போது, எரிந்த லாரியின் இருக்கையில் கருகிய நிலையில் சுமார் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் சடலமாக கிடப்பது தெரிய வந்தது. தொடர்ந்து நடத்திய விசாரணையில், கன்டெய்னர் லாரி நாமக்கல் பகுதியை சேர்ந்தவருக்கு சொந்தமானது என்பதும், கார் மற்றும் உதிரிபாகங்களை ஏற்றி வர சென்னையில் இருந்து இருங்காட்டுகோட்டைக்கு சென்றதும், லாரியை சிவகாசியை சேர்ந்த டிரைவர் காளிராஜ்(26) என்பவர் ஓட்டி வந்ததாகவும் தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக தக்கோலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முன்விரோத தகராறில் லாரியுடன் டிரைவர் எரித்து கொலை செய்யப்பட்டாரா? கொலை செய்யப்பட்டவர் சிவகாசியை சேர்ந்த டிரைவர் காளிராஜ் தானா? என்று உறுதிப்படுத்த டிஎன்ஏ சோதனை செய்ய, நீதிமன்றத்திடம் அனுமதி பெற முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் காளிராஜை டிரைவர் வேலைக்கு சேர்த்த அவரது அண்ணனையும் சந்தேகத்தின் பேரில் அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் டிஎஸ்பி விஜயகுமார் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் அமுதா, முத்துராமலிங்கம் கொண்ட 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: