முறையாக குடிநீர் வினியோகம் செய்யாததை கண்டித்து பிடிஓ அலுவலகத்தை பெண்கள் முற்றுகை வாலாஜாவில் பரபரப்பு

வாலாஜா, மார்ச் 12: முறையாக குடிநீர் வினியோகம் செய்யாததை கண்டித்து வாலாஜா பிடிஓ அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. வேலூர் மாவட்டம் வாலாஜா ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கத்தாரிக்குப்பம் கிராமத்தில் 1500க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் கடந்த சில மாதங்களாக முறையாக குடிநீர் வினியோகிக்கவில்லையாம். இதுகுறித்து அப்பகுதி மக்கள் பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில், அப்பகுதியை சேர்ந்த பெண்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் நேற்று வாலாஜா பிடிஓ அலுவலகம் முன் திரண்டு முற்றுகையிட்டனர். இதைப்பார்த்து அங்கிருந்த அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது அதிகாரிகள் குடிநீர் பிரச்னைக்கு உடனடியாக தீர்வு காணப்படும் என்று உறுதியளித்தனர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டனர். இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்ந்து, அங்கிருந்த அதிகாரிகளிடம் புகார் மனு அளித்தனர். அந்த மனுவில் கத்தாரிக்குப்பம் ஊராட்சி செயலாளர் சோழன் என்பவர் கடந்த 6 மாதமாக சரிவர பணிக்கு வருவதில்லை. இதுவரை கிராம சபா கூட்டமும் நடத்தவில்லை. எங்கள் பகுதியில் மின்விளக்கு, சாலை மற்றும் கழிவுநீர் கால்வாய் போன்றவற்றை சரியாக பராமரிப்பதில்லை. தற்போது எங்கள் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பலமுறை புகார் தெரிவித்தும் நாங்கள் கூறும் புகார்களை அதிகாரிகளுக்கு தெரியப்படுத்துவதில்லை. எனவே, அவரை பணிநீக்கம் செய்ய வேண்டும். மேலும் எங்கள் பகுதியில் எழுந்துள்ள குடிநீர் பிரச்னையை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தனர்.

Related Stories: