ரெட்டிப்பாளையம் ஊராட்சியில் ஓராண்டுக்கும் மேலாக பயன்பாடின்றி கிடக்கும் தண்ணீர் தொட்டிகள் பொதுமக்கள் அவதி

அரியலூர். மார்ச் 8: ரெட்டிப்பாளையம் ஊராட்சியில் ஓராண்டுக்கும் மேலாக வறண்டு கிடக்கும் தண்ணீர் தொட்டிகளால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்ைக விடுத்துள்ளனர். அரியலூர் மாவட்டம் ரெட்டிப்பாளையம் ஊராட்சி வி.கைகாட்டி பகுதியில் ஆண்டுதோறும் கோடைகாலத்தில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து விடும். அப்பகுதியில் உள்ள தனியார் சிமென்ட் நிறுவனம் ராட்சத ஆழ்குழாய் அமைத்தும் அருகே உள்ள கனிம சுரங்கத்தில் தண்ணீரை எடுத்தும் சிமென்ட் தயாரிக்க நாள் ஒன்றுக்கு பல லட்சம் லிட்டர் பயன்படுத்துவதால் நீர்மட்டம் குறைந்து விடுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். இதை கண்டித்தும், தண்ணீர் பிரச்னையை தீர்க்ககோரியும் கடந்தாண்டு தனியார் சிமென்ட் ஆலை முன் போராட்டம் நடத்தினர். அப்போது தனியார் சிமென்ட் ஆலை நிர்வாகிகள் வந்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆழ்குழாய் வசதியுடன் தண்ணீர் தொட்டிகள் அமைத்து தருவதாக உறுதியளித்ததால் போராட்டத்தை மக்கள் ைகவிட்டனர்.

பின்னர் ரெட்டிப்பாளையம்  ஊராட்சியில் திருச்சி மற்றும் அரியலூர் சாலை, ரெட்டிப்பாளையம் கிராம பகுதி என 5 இடங்களில் தலா ரூ.1 லட்சம் செலவில் 2 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தண்ணீர் தொட்டிகள் அமைக்கப்பட்டது. அதில் ஆலையின் தீயணைப்பு லாரிகள் மூலம் ஒருமுறை தண்ணீர் நிரப்பியதாக கூறப்படுகிறது. அன்றிலிருந்து இதுவரை தண்ணீர் நிரப்பவில்லை. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

எனவே கோடைகாலத்தில் தண்ணீர் பஞ்சத்தை போக்கும் வகையில் ரூ.5 லட்சம் மதிப்பில் வாட்டர் டேங்குகள் அமைத்த தனியார் சிமெண்ட் நிறுவனம் அருகே செல்லும் ஊராட்சி தெருக்குழாய் பைப்புகளிலாவது இணைப்பு செய்து தண்ணீர் தேக்கினால் நாள்தோறும் பொதுமக்களுக்கு பயனாக அமையும். எனவே குடிநீர் தொட்டிகளில் தண்ணீர் நிரப்ப வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: