காட்பாடி - ஆற்காடு சாலை சந்திப்பில் சோதனை முறையில் போக்குவரத்து மாற்றம் போலீசார் நடவடிக்கை

வேலூர், மார்ச் 8: வேலூர் ஆற்காடு சாலை-காட்பாடி சாலை சந்திப்பான சிஎம்சி சிக்னல் அருகில் சோதனை முறையில் போக்குவரத்தை போலீசார் மாற்றியுள்ளனர். வேலூர் மாநகரில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வாகனங்களால் முக்கிய சாலையில் அடிக்கடி ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். வாகனங்களின் அதிகரிப்புக்கு ஏற்ப சாலை விரிவாக்கம் செய்யப்படுவதில்லை என்பதே உண்மை. இந்நிலையில், மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், வேலூர் போக்குவரத்து போலீசார் பல்வேறு மாற்றங்களை செய்து வருகின்றனர். குறிப்பாக மாநகரின் பல இடங்களில் போக்குவரத்து சிக்னல்களை அமைத்து வருகின்றனர். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு காட்பாடி சாலையில் இருந்து பழைய பஸ் நிலையம் செல்லும் சாலையில் பைக், காட்பாடி-பாகாயம் டவுன் பஸ்கள், ஆட்டோக்கள் மற்றும் கார்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டது. ஆரணி, திருவண்ணாமலை, விழுப்புரம் என நீண்டதூரம் செல்லும் புறநகர் பஸ்கள், கனரக வாகனங்கள் பழைய பைபாஸ் சாலை வழியாக மாற்றிவிடப்பட்டது. இதனால் இச்சாலையில் ஓரளவுக்கு போக்குவரத்து நெரிசல் குறைந்தது.

இந்நிலையில், வேலூர் ஆற்காடு சாலை-காட்பாடி சாலை சந்திப்பான சிஎம்சி சிக்னல் அருகே சாலையின் குறுக்கே வைத்திருந்த தடுப்பு வேலி அகற்றப்பட்டு நேற்று முதல் தற்காலிகமாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து போக்குவரத்து போலீசார் கூறியதாவது: வேலூர் ஆற்காடு சாலை-காட்பாடி சாலை சந்திப்பான சிஎம்சி சிக்னல் அருகே சாலையின் குறுக்கே இருந்த தடுப்பு வேலி அகற்றப்பட்டுள்ளது. அண்ணா சாலையில் வரும் வாகன ஓட்டிகள் ஆற்காடு சாலைக்கு செல்ல வேண்டுமானால் மக்கான் சிக்னல் வழியாக திரும்பி பழைய பஸ் நிலையத்திற்கு சென்று பேலஸ் கபே வழியாக ஆற்காடு சாலைக்கு செல்வதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

நெரிசலை குறைக்கும் வகையில், ஆற்காடு செல்லும் வாகனங்கள் இனி பழைய பஸ் நிலையத்திற்குள் செல்லாமல் மக்கான் சிக்னல் வழியாக நேராக ஆற்காடு சாலைக்கு செல்லாம். இதனால் பழைய பஸ் நிலையத்திற்கு செல்லும் வாகனங்கள் நெரிசல் இல்லாமல் போக முடியும். தற்காலிகமாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மாநகரில் டோல்கேட், லட்சுமி தியேட்டர் அருகே சிக்னல் அமைக்கப்பட்டுள்ளது. புதியதாக சங்கரன்பாளையத்தில் சிக்னல் அமைக்கும் பணி விரைவில் தொடங்க்பபட உள்ளது.’ என்றனர்.

போக்குவரத்து மாற்றம் குறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘வேலூர் கிரீன் சர்க்கிள் அருகே போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்ட ஓரிரு நாட்களில் மீண்டும் பழையபடியே போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. அதேபோல், இப்ேபாது சிஎம்சி சிக்னல் அருகில் மாற்றப்பட்ட போக்குவரத்து மாற்றமும் மீண்டும் பழையபடியே மாற்றம் செய்ய வாய்ப்பு உள்ளது. போக்குவரத்து நெரிசலை குறைக்க சாலை ஆக்கிரமிப்பு அகற்றி, வாகனங்களை சாலையில் நிறுத்த விடாமல் தடுத்தால் போக்குவரத்து நெரிசலை குறைக்கலாம்’ என்றனர்.

Related Stories: